கனடாவில் கல்வி | 2023 ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களின் வருகை 86% சரிவு: அமைச்சர் தகவல்..

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களில் கடந்த ஆண்டு 86% சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா – கனடா இடையேயான உறவில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு எவ்வாறு மேம்படும் என்பது குறித்து என்னால் சொல்ல முடியாது. அதற்கான ஒளி தெரியவில்லை” என தெரிவித்தார். கடந்த 2022-ன் கடைசி 3 மாதங்களில் கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக இருந்த நிலையில், 2023-ன் கடைசி 3 மாதங்களில் இந்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 910 ஆக சரிந்ததாக கனடா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கனடா செல்லும் இந்திய மாணவர்களில் 86% சரிவு ஏற்பட்டுள்ளது.

மூன்று காரணங்களால் இந்திய மாணவர்கள் கனடாவுக்குப் பதிலாக வேறு நாடுகளை தேர்வு செய்யத் தொடங்கி உள்ளனர். ஒன்று, இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் கசப்பான உறவு. இரண்டாவது, இந்திய மாணவர்கள் தங்குவதற்கு இங்கு போதுமான அளவு வீடுகள் இல்லாதது. மூன்றாவது, இங்குள்ள பல கல்வி நிலையங்களில் போதுமான கல்வி வசதிகள் இல்லாதது” எனத் தெரிவித்துள்ளார் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரக ஆணையர் குருஸ் சுப்ரமணியன்.

இந்திய மாணவர்களின் வருகை காரணமாக கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் பொருளீட்டின. 16.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இதன் மூலம் வருவாய் வந்த நிலையில், அது தற்போது குறையத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா – கனடா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக இந்திய மாணவர்கள் செல்வது குறைந்துள்ள அதேநேரத்தில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க கனடாவும் முயன்று வருகிறது. இது குறித்து தெரிவித்த குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர், இந்த ஆண்டின் முதல் பாதியில் கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க அரசு சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி உள்ளது என கூறியுள்ளார். கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்கள்தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். கடந்த 2022ல் 2,25,835 மாணவர்கள் கனடா சென்றனர். இது கனடாவுக்குச் சென்ற வெளிநாட்டு மாணவர்களில் 41% என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times