பெய்ஜிங்: கொரோனா பெருந்தொற்றை நாம் கடுமையாகப் போராடி ஒழித்த நிலையில், சீனாவில் மீண்டும் மற்றொரு புதிய அலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த 2019இல் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் அனைத்து நாடுகளையும் வைத்துச் செய்துவிட்டது. அலை அலையாகத் தாக்கிய கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் முதலில் ஆய்வகத்தில் தோன்றியதா அல்லது மார்கெட்டில் தோன்றியதா என்பது 4 ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதும் மர்மமாகவே இருக்கிறது. இந்த விவகாரத்தில் சீனா விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.
கொரோனா:இது ஒரு பக்கம் இருக்க வைரஸ் பாதிப்பை பெரும் போராட்டத்திற்குப் பின்னர் உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கொரோனா வேக்சின் பணிகள், தீவிர கட்டுப்பாடுகள் ஆகியவை வைரஸ் பாதிப்பைக் குறைக்க உதவின. இதனால் உலகின் கிட்டதட்ட அனைத்து நாடுகளும் கொரோனா பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டன.
இதனால் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.இதற்கிடையே வைரஸ் பாதிப்பு முதலில் எங்குத் தோன்றியதோ, அதே சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு இருக்கிறது. அங்கே பரவி வரும் புதிய XBB வேரியண்ட் காரணமாக அங்கு கொரோனா பாதிப்பு உச்சமடைந்துள்ளது. இதனால் வேக்சின் போடும் பணிகளை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்
இந்த XBB வேரியண்ட் நோயெதிர்ப்பு சக்தியைக் கடந்து மனிதர்களைத் தாக்கி வருவதாகச் சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் மீதியடைந்துள்ளர். புதிய வேரியண்டால் ஏற்பட்டுள்ள இந்த அலை ஜூன் மாதத்தில் உச்சம் அடையும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது வாரத்திற்கு 6.5 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3 லட்சம் பேரைப் பாதிக்கும் ஆபத்து உள்ளதாம்.
சீனா பல காலமாக ஜீரோ கோவிட் என்ற கொள்கையைப் பின்பற்றி வந்தது. அதாவது யாரேனும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலேயே அந்த இடம் முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதற்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், கடந்தாண்டு சீனா இதைக் கைவிட்டது. அப்போது முதலே வைரஸ் பாதிப்பு அங்கே திடீர் திடீரென அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.
XBB ஓமிக்ரான் வேரியண்ட்களுக்கு (XBB. 1.9.1, XBB. 1.5, மற்றும் XBB. 1.16 உட்பட) எனத் தனியாகச் சீனா இரண்டு புதிய வேக்சின்களுக்கு முதற்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளதாகச் சீன தொற்றுநோயியல் நிபுணர் ஜாங் நன்ஷன் தெரிவித்துள்ளார்.
மேலும், மிக விரைவில் 3, 4 வேக்சின்களுக்கும் ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.சீனா தனது ஜீரோ கோவிட் கொள்கையைக் கைவிட்ட பிறகு அங்கே ஏற்படும் மிகப் பெரிய கொரோனா அலையாக இது இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 85% பேர் இதனால் பாதிக்கப்படலாம் என்று என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஏற்பட்டுள்ள அலையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இல்லை என்று சீன அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், முதியவர்களின் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், வேக்சின் பணிகளைத் தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் வைரஸ் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. புது வேரியண்ட்கள் தீவிரம் குறைவாக இருந்தாலும் அது ஏற்படுத்தும் உயிரிழப்பும் அதிகமாக இருக்கும் என்பதே வல்லுநர்களின் கவலையாக உள்ளது.
புதிய வேரியண்ட்கள் காரணமாக அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த போதிலும், கடந்த மே 11ஆம் தேதியே பொதுச் சுகாதார அவசரநிலை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம் புதிய வேரியண்டால் மற்றொரு அலை ஏற்படும் ஆபத்தும் உள்ளதற்கான வாய்ப்பையும் முற்றிலுமா மறுக்கக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.