நாட்டின் 2ஆவது உயரிய விருது: குடியரசுத் தலைவர் கையால் அர்ஜூனா விருது பெற்ற முகமது ஷமி!

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனானது.

இந்த தொடரில் 7 இன்னிங்ஸில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது. ஷமி மட்டுமின்றி விளையாட்டின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 25 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் இந்த விருது இன்று 9ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு கையால் வழங்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலிக்கு வழங்கப்பட்டது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2ஆவது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், மிதாலி ராஜ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times