ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தனிநபர்கள் தங்கள் தாயின் பெயரில் நன்கொடைகளை வழங்க அனுமதிக்கும் ‘Mother’s Endowment’ தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரத்தில் திரட்டப்படும் நிதியானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் கல்விக்கு ஆதரவளிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, இந்த பிரச்சாரம் புனிதமான ரமலான் மாதத்துடன் இணைந்து, பெற்றோர்களை கௌரவப்படுத்துதல், கருணை, இரக்கம் மற்றும் சமூகம் முழுவதும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அத்துடன் நாட்டின் மனிதாபிமான பங்கை உறுதிப்படுத்துகிறது.
துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சென்டரை தலைமையிடமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான பியூமெர்க் கார்ப்பரேஷனின் CEO சித்தார்த் பாலச்சந்திரன் என்ற இந்திய தொழிலதிபரே இந்த பிரச்சாரத்திற்கு 10 மில்லியன் திர்ஹம் பங்களிப்பை வழங்கியவர் ஆவார்.
கேரளாவைச் சேர்ந்த சித்தார்த் பாலச்சந்திரன், தாய்மார்களின் தாராள மனப்பான்மையைக் கொண்டாடும் போது உதவி செய்வதற்கான வாய்ப்புக்காக துபாய் ஆட்சியாளருக்கு நன்றி கூறியதுடன், “உலகம் முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு உதவிகளை வழங்குவதே நமது தாய்மார்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்க சிறந்த வழியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
Mothers’ Endowment’ பிரச்சாரமானது, பிரச்சாரத்தின் இணையதளம் (Mothersfund.ae), கட்டணமில்லா எண் (800 9999) உட்பட ஆறு முக்கிய சேனல்கள் மூலம் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகளை வரவேற்கிறது.அதில் எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கியின் (AE790340003708472909201) வங்கிக் கணக்கு எண்ணுக்கு வங்கிப் பரிமாற்றங்கள் மூலமாகவும் நன்கொடைகளை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.