இந்தியாவின் பல நகரங்களிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவை வழங்கி வரும் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கோடை கால விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அமீரகத்தில் தற்போது அபுதாபி, துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, அல் அய்ன் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இந்த அறிவிப்பு, அமீரகம் மற்றும் இந்தியா இடையே பயணிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு எளிதான பயண அனுபவத்தை வழங்கும் என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ள இந்த கூடுதல் விமான சேவையின் மூலம் பயணிகள் குறைவான கட்டணத்தில் பறக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் UAE – இந்தியா இடையே வாரந்தோறும் 24 விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்து உள்ளது.
இதன்மூலம், அபுதாபிக்கு 14 விமானங்கள் கூடுதலாகவும், துபாய்க்கு 4 விமானங்கள் கூடுதலாகவும், ராஸ் அல் கைமாவிற்கு 6 விமானங்கள் கூடுதலாகவும் வாரந்தோறும் இயக்கப்பட இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. எனினும் ஷார்ஜா மற்றும் அல் அய்னிற்கு பழைய எண்ணிக்கையிலேயே விமானங்கள் இயக்கப்படும் எனவும் விமான நிறுவனம் கூறியுள்ளது.