ஒரே நாளில் ரூ.677 கோடி நன்கொடை: கமலா ஹாரிசுக்கு குவியும் ஆதரவு..!

ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அவரது பிரசாரத்திற்கு ஒரே நாளில் ரூ.677 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. ஆதரவு பெருகுவதால் விரைவில் அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார். 81 வயதாகும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். அதேபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார்.

இந்த சம்பவங்கள் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்றும் இதனால் அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர். ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூட ஜோ பைடன் விலக வேண்டும் என்று கூறி இருந்தார். இதனையடுத்து அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.

தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் அதிபராக போட்டியிடுவதற்கும் பைடன் ஆதரவு தெரிவித்தார்.ஆனால் இதுவரை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவிக்கவில்லை. கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவு கமலா ஹாரிசுக்கு இருப்பதால் அவரே அதிபராக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவரது பிரசாரத்திற்கு நன்கொடைகள் குவிந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அவருக்கு 81 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், ரூ.677 கோடி) நன்கொடை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கமலா ஹாரிசுக்கு ஆதரவு பெருகுவதையே இது காட்டுகிறது.இதனால் கமலா ஹாரிசுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரத்தைத் துவங்குவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு, ‘பைடன் ஹாரிஸ்’ பிரசாரக்குழு என்று இருந்த பெயர், தற்போது ‘ஹாரிஸ் பார் பிரசிடென்ட்’ என்று மாற்றப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times