ஓமான் நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஓமான் சாகச மையம் (Oman Adventure Centre) புதிதாக முசந்தம் கவர்னரேட்டில் திறக்கப்பட்டுள்ளது. ஓமானில் உள்ள 1,800 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள இந்த இரட்டை ஜிப்லைனை் (zipline) உலகின் மிக நீளமான ஜிப்லைன் என்றும் இதில் பார்வையாளர்கள் சாகச ரைடினை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓமான் டூரிசம் டெவலப்மென்ட் நிறுவனத்தால் (ஓம்ரான்) கசாப் விலாயத்தில் தொடங்கப்பட்டது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜிப்லைன் திட்டம் திறக்கப்படுவதற்கு முன்பு 2,000 க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டது என்றும் உயர்ந்த தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளுடன் இந்த சோதனைகள் முடிக்கப்பட்டது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஓமான் அட்வென்ச்சர் சென்டர் பல்வேறு தரமான தயாரிப்புகள் மற்றும் அனுபவங்களை வழங்குவதன் மூலம் அதன் சுற்றுலா சந்தையை பல்வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஜிப்லைன் திட்டம் பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் சாகச மற்றும் பொழுதுபோக்கு திட்டங்களுக்கான சிறப்பு ஆபரேட்டரான LEOS ஆல் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் சுற்றுலா மேம்பாட்டு இயக்குநர் ஜெனரல் பின் ஹரேப் அல் ஒபைதானி அவர்கள் பேசுகையில், ஓமான் சுல்தானகத்தில் உள்ள பல்வேறு முக்கிய சுற்றுலாத் தலங்களில், குறிப்பாக முசந்தம் கவர்னரேட்டில் வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க அமைச்சகம் செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
அத்துடன் முசந்தம் கவர்னரேட்டில் ஹைகிங் மற்றும் மவுண்டன் பைக்கிங் பாதைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் அனைத்து பாதுகாப்பு தரநிலைகளையும் பூர்த்தி செய்யும் தகவல் மற்றும் வழிகாட்டும் சைன்போர்டுகளை நிறுவுவதும் அடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஓமான் அட்வென்ச்சர் சென்டரில் உள்ள உலகின் மிக நீளமான ஜிப்லைன் வாரநாட்கள், வார இறுதி நாட்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.