புகையிலையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகையிலை நுகர்வைக் குறைப்பதற்காகவும் உலக சுகாதார அமைப்பு தலைமையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது.
பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 27 கோடி பேர் புகைக்கின்றனர். 13 முதல் 15 வயது வரையிலான ஐந்தில் ஒரு பங்கு மாணவர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புகையிலை 25 வகையான நோய்களையும், சுமார் 40 வகையான புற்றுநோய்களையும் உண்டாக்கும்.
புகை பிடிப்பதினால் புற்றுநோய், கண், நுரையீரல் என உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படும். மேலும் தோலின் தன்மை மாறி சுருக்கம் ஏற்படும். இதனால் இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல் காணப்படுவார்கள். அதுபோல வாய் துர்நாற்றம், இருமல், மஞ்சள் நிறத்தில் பற்கள் மற்றும் ரத்த சோகையை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
புகையிலை எதிர்ப்பு தினம் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் மீது புகையிலையின் அழிவுகரமான தாக்கத்தை நினைவூட்டுகிறது. புகைப்பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட ஊக்குவிப்பதும், இளைஞர்கள் புகைபிடிப்பதை தொடங்குவதைத் தடுப்பதும் இந்த தினத்தின் நோக்கமாகும். புகையிலை கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம், இது தொடர்பான நோய்களின் சுமையை குறைப்பதோடு, ஆரோக்கியமான சமூகத்தை மேம்படுத்தலாம்.