El Nino 2023 | ‘எல் நினோ’ தாக்கம் – உலகின் எந்தெந்த நாடுகள் பாதிக்க வாய்ப்பு?

வானிலை ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், உலக நாடுகள் என பல தரப்பிலும் இப்போதைய பேசுபொருள் ’எல் நினோ’ என்ற காலநிலை நிகழ்வு. இந்நிகழ்வு சராசரியாக 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு (2023) எல் நினோ ஆண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த எல் நினோ நிகழ்வால் உலகம் முழுவதும் பரவலாக ஆண்டின் பிற்பகுதியில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வானிலை ஆராய்ச்சி அமைப்பான (US National Oceanic and Atmospheric Administration – NOAA) தெரிவித்துள்ளது. பொதுவாகக் குறிப்பிட வேண்டுமென்றால் அதீத மழை, திடீர் புயல், மிதமிஞ்சிய வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

எல் நினோ என்றால் என்ன? – 

எல் நினோ என்பது உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்புதான் ‘எல் நினோ’ என்று விஞ்ஞானிகள் விளக்கம் தருகின்றனர்.

பசிபிக் கடல்பரப்பு வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது, 7 முதல் 24 மாதங்கள் வரை அதிகமாக்கும் நிகழ்வு இது.இந்த எல் நினோ எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதீத மழை பெய்வதோ அல்லது கடுமையான வறட்சி ஏற்படுவதோ நிர்ணயமாகும்.

பருவம் தப்பிய மழையும் கேடு, பருவம் தவறிய வெப்பமும் கேடு. இவை இரண்டுமே மக்கள் மீது பொருளாதாரம் மீது பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால்தான் உலகக் கவனம் முழுவதும் இந்த காலநிலை நிகழ்வு மீது குவிந்திருக்கிறது.

இந்நிலையில், என்ஓஏஏ-வின் விஞ்ஞானி மிச்செல் எல் ஹூரெக்ஸ் வியாழக்கிழமை ஓர் அறிக்கையை அதன் இணையதளத்தில் வெளியிட்டார்.

அதில் அவர், ”எல் நினோவால், உலகளவில் எந்தெந்தப் பகுதிகளில் தற்போது வழக்கத்துக்கு மாறான அதீத வெப்பநிலை நிலவுகிறதோ அந்தந்தப் பகுதிகளில் இன்னும் வெப்பநிலை அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ஆஸ்திரேலிய அரசு இவ்வாரத் துவக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், எல் நினோவால் நாட்டில் வறட்சியான நாட்கள் அதிகமாக இருக்கும். வெப்பமும் சற்று அதிகமாகக் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாடோ கடுமையான காட்டுத்தீ ஏற்படலாம் என்று கணித்துள்ளது. ஜப்பானில் இந்த ஆண்டு வசந்த காலம் வழக்கத்தைவிட வெப்பம் நிறைந்ததாக இருந்ததற்கு எல் நினோ நிகழ்வே காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது

அமெரிக்காவில் கோடையிலேயே எல் நினோ தன் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது சற்று தள்ளிப்போனது. வசந்த கால பிற்பகுதியில் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் குளிர்காலம் நெருங்கும்போது எல் நினோவின் விளைவு கடுமையாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவின் சில பகுதிகளில் குறிப்பாக தெற்கு கலிபோர்னியாவிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரை வழக்கத்தைவிட சற்று அதிகமான குளிரும், வடமேற்கு பசிபிக்கிலிருந்து ஓஹியோ பள்ளத்தாக்கு வரை வழக்கத்துக்கு மாறான வறட்சியும் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டின் வடக்கு மாகாணங்களில் வழக்கத்துக்கு மாறான அளவில் வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ட்ரில்லியன் அளவில் இழப்பு

இந்த ஆண்டு எல் நினோ விளைவால் சர்வதேச அளவில் 3 ட்ரில்லியன் அளவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படலாம் என்று ஓர் அறிவியல் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் கணிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு, தொழில்கள் நலிந்து, நோய்கள் மலிந்து இந்த பொருளாதார தேக்கம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதனால் பெரு போன்ற தென் அமெரிக்க கண்ட நாடுகள் எல் நினோ விளைவை எதிர்கொள்ள 1.06 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்து வைத்துள்ளது. புயல்களால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் பிலிப்பைன்ஸ் நாடும் அரசாங்க சிறப்புக் குழுவை அமைத்து இப்போதிருந்தே பாதிப்புகளைக் கணிக்கவும், விளைவுகளை சமாளிக்கவும் திட்டங்களை தீட்ட முனைப்பு காட்டி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை எல் நினோ பாதிப்பு அதன் தாக்கத்தை ஏற்படுத்த 70 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம், வேளாண் ஆராய்ச்சிக் கழகங்கள் ஆகியன இணைந்து தற்போதிருந்தே இந்தத் தாக்கத்தை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனர்.

எல் நினோவின் தாக்கம் ஜூலை 2023 முதல் இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை ‘லா நினா’ காலநிலை நிகழ்வு நீடித்து வந்ததால், அதன் பின்னர் வரும் ‘எல் நினோ’ ஆண்டில் பருவமழை பற்றாக்குறைக்கான சூழலை உருவாக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times