உலகின் பாதுகாப்பான நகரங்களில் அமீரகம் முண்ணனி.. எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நிரூபித்த ஐந்து வைரலான சம்பவங்கள்.!!

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு வருகிறது. இரவு, பகல் என எந்த நேரத்திலும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக உணர வைத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, உலகின் பாதுகாப்பான ஐந்து நகரங்களில் அபுதாபி, துபாய் மற்றும் அஜ்மான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பொருளாதாரம், சமூகம் மற்றும் பாதுகாப்புப் பகுதிகள் பற்றிய தரவுகளின் குளோபல் வழங்குனரான Numbeo வெளியிட்ட 2023-ம் ஆண்டின் முதல் 6 மாத தரவுகளின்படி, உலகின் ஐந்து பாதுகாப்பான நகரங்களில் அபுதாபி, அஜ்மான் மற்றும் துபாய் ஆகியவை சூரிச், சிங்கப்பூர், ஹாங்காங், லண்டன், நியூயார்க், டோக்கியோ, சியோல் மற்றும் 300-க்கும் மேற்பட்ட நகரங்களை விட பாதுகாப்பனாவை என்று மதிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, உலக மக்களை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு சம்பவங்கள் அமீரகம் மிகவும் பாதுகாப்பான நாடு என்பதை வெளிப்படுத்தியுள்ளன. அவ்வாறு உலகைக் கவர்ந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

உதாரணமாக ஒரு டாக்ஸியில் உங்களது விலைமதிப்பற்ற பொருட்கள் அடங்கிய பைகளை மறந்து விட்டால் நீங்கள் கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அமீரகத்தைப் பொறுத்தவரை நீங்கள் உங்கள் பொருளை இழக்க நேரிடாது.

இதுபோலவே, பயணிகள் டாக்ஸியில் பணம் மற்றும் வைரங்கள் நிறைந்த பைகளை விட்டுச் சென்ற பல நிகழ்வுகள் அமீரகத்தில் நடந்தேறி உள்ளன, ஆனால் அவை பின்னர் டாக்ஸி டிரைவர்களால் கண்டுபிடிக்கப்பட்டபோது அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

இது போல, கடந்த ஆண்டு ஜூலை மாதம், துபாய் டாக்ஸி கார்ப்பரேஷனின் பெண் டாக்ஸி ஓட்டுநரான நான்சி ஓர்கோ என்பவர், பயணி ஒருவர் மறந்து விட்டுச்சென்ற 1 மில்லியன் திர்ஹம்கள் தொகை அடங்கிய பையை திருப்பி ஒப்படைத்திருக்கிறார். இதுபோல, மற்றொரு நிகழ்வில், 1 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான வைரங்கள் அடங்கிய பையை டாக்ஸியில் விட்டுச்சென்ற உரிமையாளரிடம் திருப்பி அளிக்க்கப்பட்டது.

டாக்ஸி மட்டுமல்லாமல் கிரிஸ்டல் ஃபிஷர் என்ற குடியிருப்பாளர் அவரது லேப்டாப் மற்றும் உடமைகளை மாலில் உள்ள உணவகத்தில் மேஜையிலையே விட்டுச் செல்லும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், தான் இதை எல்லா இடங்களிலும் செய்யமாட்டேன் என்றும், பல சந்தர்ப்பங்களில் மக்கள் தங்கள் இடத்தைக் காப்பாற்றுவதற்காக முக்கியமான பொருட்களை மேசையில் வைப்பதை பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வைரல் வீடியோவை துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் பகிர்ந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே, நவம்பர் 2021 இல், துபாயின் பட்டத்து இளவரசரும், துபாயின் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், பார்க்கிங் பகுதியில் குழந்தையின் ஸ்ட்ரோலரை மறந்து விட்டுச்சென்ற தாயான கிளாடின் ஃபூக் என்பவரின் வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், மறுநாள் அது அதே இடத்திலேயே நிற்பதைக் காணலாம். மேலும், அடுத்த முறை, தயவு செய்து எந்த ஸ்ட்ரோலர்களையும் விட்டுச் செல்ல வேண்டாம் என்று ஷேக் ஹம்தான் அறிவுறுத்தியும் இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் அய்மன் யமன் என்பவர் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலானது. அதில் எமிரேட்டில் பாதுகாப்பின் அளவைச் சோதிக்க முயன்ற அவர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரினை பொது பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, சாவியை கார்மீது விட்டுவிட்டு ஜிம்மிற்குச் சென்றிருக்கிறார்.

அவர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் சாவி அதே இடத்தில் இருப்பதைப் பார்க்கிறார். ஆச்சரியத்தில் மூழ்கிய அவர், “பூமியில் சிறந்த நகரம் துபாய். Habibi. Come to Dubai” என்று பகிர்ந்திருக்கிறார்.

இவ்வாறு துபாய் எவ்வளவு பாதுகாப்பானது என்று சமூக ஊடகங்களில் தங்களைப் பின்தொடர்பவர்களுக்குக் காட்டுவதற்காக பல சமூக ஊடக பிரபலங்கள் தங்கள் மதிப்புமிக்க பொருட்களை மால்கள் மற்றும் பல்வேறு பொது இடங்களில் விட்டுச் சென்று வீடியோ பதிவு செய்கின்றனர்.

பிரபல TikToker CompRandom என்பவர் தனது மொபைல் மற்றும் கிரெடிட் கார்டுகள் அடங்கிய பர்ஸ் ஆகிய இரண்டையும் பொது இடத்தில் விட்டுச் செல்கிறார்.

அதன் பிறகு, ஐந்தரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அனைத்து கிரெடிட் கார்டுகளுடனும் பர்ஸ் மற்றும் மொபைல் அதே இடத்தில் இருப்பதைக் கண்டு வியந்து போகிறார். அத்துடன் உலகின் வேறு எந்த நகரங்களிலும் இதைச் செய்ய முடியாது, உலகின் சிறந்த நகரம் துபாய் என்று தெரிவித்துள்ளார்.

இது போன்ற பல சம்பவங்கள் அமீரகம் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றது. இவை மட்டுமல்லாமல் பகல், இரவு என எல்லா சமயங்களிலும் குடியிருப்பாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி தனியாக செல்வதற்கு பாதுகாப்பான நாடாக அமீரகம் திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times