காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பத்தை கிரகித்துக் கொள்வதால், கடல் வெப்பநிலை வரலாறு காணாத அளவை எட்டியுள்ளது.
இது பூமியின் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் காலநிலை மாற்ற சேவையான கோபர்நிகஸின் (Copernicus) கூற்றுப்படி, இந்த வாரம் கடல் மேற்பரப்பின் தினசரி வெப்பநிலையின் சராசரி, இதற்கு முன்னர் எட்டபட்ட அதிகபட்ச வெப்பநிலையான, 2016இன் வெப்பநிலையை முறியடித்தது.
கடலின் வெப்பநிலை 20.96 செல்சியஸை (69.73 ஃபாரன்ஹீட்) எட்டியது. இது இந்த ஆண்டின் சராசரியைவிட மிக அதிகம்.
வெப்பத்தை உறிஞ்சும் கடல்கள்
பெருங்கடல்கள் காலநிலையைச் சீராக்குபவை. அவை வெப்பத்தை உள்ளிழுத்துக் கொள்கின்றன, பூமியின் பாதி ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன, மேலும் வானிலை செயல்பாடுகளை இயக்குகின்றன.
கடல் நீர் சூடானால், கரிம வாயுவை (கார்பன் டை ஆக்சைடை) உறிஞ்சும் அதன் திறன் குறைகிறது. அதாவது கிரகத்தை வெப்பமாக்கும் இந்த வாயு, உறிஞ்சப்படாமல் வளிமண்டலத்திலேயே தங்கியிருக்கும். இதனால் கடலில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவது துரிதப்படுகிறது, கடல் மட்ட உயர்வுக்கு வழிவகுக்கிறது.
கடல்வாழ் உயிரினங்களுக்கு என்னவாகும்?
பெருங்கடல்கள் வெப்பமானால், மீன் மற்றும் திமிங்கலங்கள் போன்ற கடல் இனங்கள் குளிர்ந்த நீரைத் தேடி நகரும். அது உணவுச் சங்கிலியை சீர்குலைக்கும். இதனால் மீன்வளம் பாதிக்கப்படும், என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சுறாக்கள் உட்பட சில வேட்டையாடும் கடல் விலங்குகள் வெப்பநிலை அதிகமானால் குழப்பமடைந்து, ஆக்ரோஷமாக மாறும்.
அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தில், மெக்சிகோ வளைகுடாவின் கடல் வெப்ப அலையைக் கண்காணித்து வரும் முனைவர் கேத்ரின் லெஸ்னெஸ்கி கூறுகையில், “நீங்கள் குதிக்கும்போது கடல் குளியல்தொட்டி போல் (வெதுவெதுப்பாக) இருக்கிறது. “புளோரிடாவில் உள்ள ஆழமற்ற திட்டுகளில் பவளப்பாறைகள் பரவலாக வெளுப்பாகி வருகின்றன. பல பவளப்பாறைகள் ஏற்கனவே இறந்துவிட்டன,” என்கிறார்.
“வரலாற்றின் எந்தக் கட்டத்திலும் நாம் செய்ததை விட, கடல்களை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறோம்,” என்கிறார் இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் கடல் ஆய்வகத்தைச் சேர்ந்த முனைவர் மேட் ஃப்ரோஸ்ட். மாசுபாடு மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் ஆகியவை கடல்களை பாதிக்கின்றன என்றும் சுடிக்காட்டுகிறார்.
காலம் தவறி வெப்பமடைந்திருக்கும் கடல்
கடல்கள் உச்ச வெப்பநிலையைத் தொட்டிருக்கும் இந்த காலகட்டம் குறித்து விஞ்ஞானிகள் கவலைப்படுகின்றனர்.
கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையைச் சேர்ந்த முனைவர் சமந்தா பர்கெஸ், மார்ச் மாதத்தில் தான் உலகளவில் கடல்கள் வெப்பமாக இருந்திருக்க வேண்டும், ஆகஸ்டில் அல்ல, என்கிறார்.
“இப்போதைய வெப்பநிலையைப் பார்க்கும்போது, இப்போதைக்கும் அடுத்த மார்ச் மாதத்திற்கும் இடையே கடல் மேலும் எவ்வளவு வெப்பமடையும் என்பதைப் பற்றி பதற்றமாக இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
ஸ்காட்டிஷ் கடல் கரையில் ஏற்படும் பாதிப்புகளை, கடல் அறிவியலுக்கான ஸ்காட்டிஷ் சங்கத்துடன் கண்காணித்து வரும் பேராசிரியர் மைக் பர்ரோஸ் கூறுகையில், “இந்த மாற்றம் மிக விரைவாக நடப்பதைப் பார்ப்பது கவலை தருவதாக இருக்கிறது,” என்கிறார்.
பெருங்கடல்கள் தற்போது ஏன் மிகவும் சூடாக இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளிலிருந்து வெப்பத்தை உறிஞ்சுவதால், பருவநிலை மாற்றம் கடல்களை வெப்பமாக்குகிறது என்றும் கூறுகிறார்கள்.
“நாம் புதைபடிவ எரிபொருட்களை எவ்வளவு அதிகமாக எரிக்கிறோமோ, அவ்வளவு அதிக வெப்பத்தைப் பெருங்கடல்கள் உள்ளிழுத்துக்கொள்ளும். அதாவது இச்சூழ்நிலையில் கடல்களை நிலைநிறுத்துவதற்கும் அவற்றை முந்தைய நிலைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கும் நீண்ட காலம் எடுக்கும்,” என்று முனைவர் பர்கெஸ் விளக்குகிறார்.