குவைத் நாடு… லட்ச லட்சமாய் சம்பளம் கொட்டி கொடுக்கும் நாடு என ஆசிய அளவில் பெயர் பெற்று விளங்குகிறது. இந்திய மதிப்பில் எடுத்து கொண்டால் ஒரு குவைத் தினார் என்பது 270 ரூபாய் ஆகும். இதனால் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் குவைத் சென்று வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. இந்நிலையில் குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் முக்கியமான ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது.
மின் கட்டணம், குடிநீர் கட்டணம்அதாவது, வெளிநாடுகளில் இருந்து குவைத்தில் தங்கியிருப்போர் உரிய மின்சார கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை செலுத்திய பின்னரே வெளிநாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். அதாவது, சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் கூட தங்கள் வீட்டிற்கு உரிய மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை செலுத்தியாக வேண்டும். இந்த உத்தரவு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் போக்குவரத்து அபராதங்களை வெளிநாட்டினர் சரியாக செலுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே குவைத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது கடந்த 19ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது கவனிக்கத்தக்கது. இந்த இரண்டு உத்தரவுகளும் குவைத் நாட்டில் வாழும் வெளிநாட்டு மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
குவைத் வேலைவாய்ப்பு
இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், வெளிநாட்டில் இருந்து குவைத்தில் வந்து வசிப்போரின் எண்ணிக்கையை எடுத்து கொண்டால் மொத்த மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதம். அதாவது வெறும் 31 சதவீதம் பேர் தான் உள்ளூர்வாசிகள். நல்ல வேலை, கை நிறைய சம்பளம், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றால் வெளிநாட்டு மக்கள் பலரும் ஈர்க்கப்பட்டு குவைத்தில் சென்று குடியேறி வருகின்றனர்.
குவைத் அரசு அதிரடி
இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய கட்டணங்களை உடனடியாக செலுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பல மாதங்கள் நிலவையில் வைத்துள்ளனராம். சிலர் ஆண்டுக்கணக்கில் கட்டணத்தை நிலுவையில் வைத்திருப்பதாக தெரிகிறது. இது குவைத் அரசின் செயல்பாடுகளை பல விதங்களில் பாதித்து வருகிறது. எனவே நிலுவையில் உள்ள கட்டணத்தை வசூலிக்கவும், வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறாமல் தடுக்கவும் மேற்குறிப்பிட்ட வகையில் அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த விஷயம் மட்டுமல்ல, வேறு சில கட்டுப்பாடுகளும் குவைத்தில் நெருக்கடியாக மாறி வருகின்றன. அதாவது, பேச்சுரிமை என்ற விஷயத்திற்கு கிடுக்குப்பிடி போடவுள்ளனர். பேச முடியும் என்பதற்காக அரசுக்கு எதிராக, தேவையற்ற வதந்திகளை பற்ற வைத்தால் அவ்வளவு தான். உள்ளூர் மீடியாக்களும் எதை பேச வேண்டும், எதை பேசக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் பாயவுள்ளன. மீறினால் கடும் தண்டனைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க உள்ளனர்