​என்ன பெரிய வந்தே பாரத்.. 350 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் ஹூஷ் ரயில்.. எந்த ஊர்ல தெரியுமா?

உலகம் முழுக்க மக்கள் பெரும்பாலும் பேருந்துகளில் பயணிப்பதை விட ரயில்களில்தான் பயணிக்க அதிகம் விரும்புவார்கள். போக்குவரத்து நெரிசல் பிரச்னையில்லை, பேருந்து பயண நேரத்தை விட ரயில் பயண நேரம் பாதியாக குறைவது, கட்டணம் குறைவு கழிவறை வசதிகள் உள்ளிட்டவைதான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இதனால் உலக நாடுகள் ரயில் சேவைகளை முக்கியமாக கருதுகின்றன.

அதிவேக ரயில்கள் உருவாக்கம்

உலகம் எங்கும் அதிவேகமாக பயணிக்கக் கூடிய ரயில்களை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ராஜதானி, சதாப்தி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். அதன் வரிசையில் சமீபத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் இணைந்துள்ளது. வந்தே பாரத் ரயிலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு உள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் அதிவேக ரயில்

இந்த நிலையில் தென் கிழக்கு ஆசியாவிலேயே அதிவேகமான ரயிலை இயக்கி அதிரடி காட்டியுள்ளது இந்தோனேஷியா. அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் ஜோகோ விடோடோ அதிவேக புல்லட் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். ஜகார்த்தா முதல் பாண்டுங் நகரம் வரை இந்த ரயிலானது இயக்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள் என்ன?

இந்த ரயில் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் சீறிப் பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக இரண்டு நகரங்களுக்கும் இடையே 3 மணி நேரமாக இருந்த பயண நேரம் வெறும் 40 நிமிடங்களாக குறைந்துள்ளது. ரயிலில் சுமார் 600 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது முழுக்க முழுக்க மின்சாரம் மூலம் இயங்குவதால் கார்பன் உமிழ்வு குறைவுக்கு பங்களிக்கும் என்று கூறப்படுகிறது.

டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

அதிவேகமாக செல்லக்கூடிய இந்த ரயிலுக்கு ஹூஷ் என்று இந்தோனேஷியா அரசாங்கம் பெயர் வைத்துள்ளது. ரயில் சேவை தொடங்கப்பட்டு விட்டாலும் இதுவரை டிக்கெட்டுக்கான விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. இரண்டாம் வகுப்பு பயணத்திற்கு இந்திய மதிப்பில் 1,330 ரூபாயும், விஐபி வகுப்பு பயணத்திற்கு 1,879 வரையும் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சுமார் 7.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ள இந்த ரயில் சேவை திட்டத்திற்கு சீனாதான் 70 சதவிகிதம் நிதியை வழங்கியுள்ளது.

7 ஆண்டுகள் வரை நடைபெற்ற பணிகள்

சீனாவின் ரயில்வே நிறுவனமும், இந்தோனேஷியாவின் நிறுவனங்களும் இணைந்து இதுதொடர்பான பணிகளை மேற்கொண்டன. அதிவேக ரயில் திட்டத்திற்கான பணிகளை 2016ஆம் ஆண்டு இந்தோனேஷியா தொடங்கியது. 2019ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர இருந்த நிலையில் நிலம் எடுப்பு, கொரோனா தொற்று, காலநிலை மாற்றங்களால் பணிகள் தாமதமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times