காத்மாண்டு: நேபாளத்தில் 3 நாட்களாக 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.1 எனும் ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இமையமலையையொட்டியுள்ள நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக நேற்று முன்தினம் காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5.18 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த 3ம் தேதி இதேபோல ரிக்டர் அளவு 5.3 என நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
ரிக்டர் அளவில் 1 அலகு என்பது அதற்கு முந்தைய அலகு அளவை விடப் பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக ரிக்டர் அளவில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10×10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். இதில் 2க்கும் குறைவாக பதிவாகும் நில அதிர்வுகளை நம்மால் உணர முடியாது. பொதுவாக 6க்கும் அதிகமான ரிக்டர் அளவில் பதவாகும் நில நடுக்கங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
முன்னதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தால் சுமார் 4 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.