அனைத்து விதமான பார்வையாளர்கள் விசாவையும் எளிதாக புதுப்பிக்கும் வண்ணம் சவுதி அரேபிய அரசு முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியிருப்பது சர்வதேச பயணிகளை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஏழு நாடுகளில் மிகவும் முக்கியமானது சவுதி அரேபியா. ஏனெனில் மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது. இங்கு வர்த்தகம், சுற்றுலா, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் எனப் பல்வேறு விஷயங்களுக்காக பயணிக்கும் மக்கள் ஏராளம். அதுமட்டுமின்றி மிகப்பெரிய எண்ணெய் வளத்தை கொண்டிருப்பதால் உலக நாடுகள் முக்கியமான வர்த்தக உறவை சவுதி அரேபியா உடன் வைத்திருக்கின்றன.
சவுதி அரேபியா அரசு அறிவிப்பு
எனவே இந்நாட்டிற்கு அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் அதிகமிருப்பர். இவர்கள் பார்வையாளர்கள் விசா மூலம் தான் பெரும்பாலும் வருகை புரிவர். தூதரகம் மூலம் உரிய முறையில் விண்ணப்பம் செய்து விசாவை புதுப்பித்துக் கொள்ள முடியும். இந்நிலையில் சவுதி அரேபிய அரசு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, அனைத்து விதமான பார்வையாளர்கள் விசாவையும் ஆன்லைன் மூலமாகவே புதுப்பித்துக் கொள்ளலாம்.
விசா புதுப்பிக்க ஏற்பாடு
இந்த வசதி அடுத்த 6 மாதங்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம், குடும்பம், தனிப்பட்ட என பார்வையாளர் விசாவை பயன்படுத்துவோர் Abshir மற்றும் Mukeem ஆகிய அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணையதளங்கள் மூலம் புதுப்பித்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. Abshir தளத்திற்கு சென்றால் தனிப்பட்ட விசா அல்லது பிஸினஸ் விசா என இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்கும். அதற்கேற்ப புதுப்பித்து கொள்ள முடியும்.
கட்டணத்தில் மாற்றமில்லை
ஒருமுறை வருவோர், பலமுறை வருவோர் ஆகியோர் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். புதுப்பிக்க வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழலாம். அதற்கு இல்லை என்ற பதில் கிடைத்துள்ளது. பழைய கட்டணமே தொடர்கிறது. அதாவது 100 ரியால்கள் (சவுதி அரேபிய பண மதிப்பில்). விசா புதுப்பிப்பதை மறக்காமல் வைத்து கொள்ளும் வகையில் ஒரு வசதி செய்யப்பட்டுள்ளது.
7 நாட்களுக்கு முன் மெசேஜ்
அதாவது, விசா காலாவதி ஆவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக அலர்ட் மெசேஜ் உங்கள் மொபைலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காலாவதியாகும் முன்பாக புதுப்பித்து விட வேண்டும். இதில் மேலும் சில விதிமுறைகள் இருக்கின்றன. ஒருமுறை மட்டும் நுழையும் விசாவை மாதந்தோறும் புதுப்பிக்க வேண்டும். பலமுறை வந்து செல்லும் விசாவை 90 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும்.
ஆன்லைனில் புதிய வசதி
இதை செய்வதற்கு மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் வகையில் மருத்துவ காப்பீடு செய்திருப்பது அவசியம். ஒருவேளை ஆன்லைனில் புதுப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் வந்தால் Tawasul இணையதளத்தை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறையால் பயணிகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஓட்டுநர் உரிமம் தேவையில்லை
மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அருமையான திட்டத்தையும் அறிவித்துள்ளது. பார்வையாளர் விசா மூலம் சவுதி அரேபியாவிற்கு வருவோர், அடுத்த ஓராண்டிற்கு வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி வாகனங்களை இயக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.