நியூயார்க்: வீகன் எனப்படும் வெறும் காய்கறி, பழங்களை மட்டுமே சாப்பிடும் டயட்டை பின்பற்றி வந்த யூடியூப் பிரபலம் ஜானா சம்சோனோவா (39) என்பவர் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்துக் குறைபாட்டால் அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. உடல் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில் விதவிதமான டயட்களை பின்பற்றுவோருக்கு இந்த சம்பவம் எச்சரிக்கை மணியாக உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜானா சம்சோனாவா. சிறு வயதில் இருந்தே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த ஜானா. இதனால் தினமும் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை அவர் தீவிரமாக பின்பற்றி வந்தார்.
மேலும், தான் பின்பற்றும் டயட்டுகளையும், அவரது உணவு முறைகளையும் இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றிலும் அவர் பதிவிட்டு வந்தார். அவருக்கு லட்சக்கணககான ஃபோலோவர்ஸ் இருந்தனர்.
எமனாக வந்த வீகன் டயட்: இதனிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒரு வீகனாக மாறுவதாக அறிவித்தார் ஜானா. வீகன் என்றால் சைவ உணவுகளை உண்பவர் என்று அர்த்தம். அவர்களை தான் வெஜிட்டேரியன் என்று அழைப்பார்களே.. அது என்ன வீகன் என்று கேட்கிறீர்களா? சரியான கேள்விதான். இவர்கள் அசைவம் மட்டுமல்ல.. விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பால், வெண்ணெய், நெய்யை கூட தொட மாட்டார்கள். அதேபோல, எண்ணெய்யை கூட பயன்படுத்த மாட்டார்கள். பச்சை காய்கறிகள், பழங்கள், முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகளை மட்டுமே உண்பார்கள்.
தோற்றம் மாறியது: இந்த வீகன் டயட்டை தான் ஜானா சம்சோனாவோ பின்பற்ற தொடங்கினார். தினமும் தான் என்னென்ன உணவுகளை சாப்பிடுகிறேன் என வீடியோவும் வெளியிட்டு வந்தார். ஜானாவை பின்பற்றி ஆயிரக்கணக்கானோர் வீகனாக மாறிக் கொண்டிருந்தார். இந்த சூழலில் தான், கடந்த சில மாதங்களாகவே ஜானாவின் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அவரது தோல் சுருங்கி போகுதல், மிகவும் ஒல்லியான தோற்றம் என ஆளே மாறினார் ஜானா. அப்போதும் கூட தனது உடலில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாமல், “பார்த்தீர்களா.. வீகன் டயட்டால் எப்படி உடல் எடை குறைகிறேன்” என சொல்லி வந்துள்ளார் ஜானா.
திடீர் மரணம்: இதனிடையே, கடந்த மாதம் முதலாக வெறும் பலாப்பழத்தை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்தார். இந்நிலையில், தனது நண்பருடன் சுற்றுலா சென்றிருந்த ஜானா நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அசைவம் சாப்பிடாமல் வீகன் டயட்டை பின்பற்றி ஆரோக்கியமாக இருந்த ஜானா எப்படி உயிரிழந்தார் என அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில், அவரது உடலை கூராய்வு செய்த மருத்துவரகள், அவரது உடலில் எந்த விட்டமின்களும், கொழுப்புச் சத்தும் இல்லாமல் வெறும் சக்கையாக மாறிப்போனதாக தெரிவித்தனர்.
மருத்துவர்கள் எச்சரிக்கை: இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “ஒரு மனிதனுக்கு புரோட்டீன், கொழுப்புச் சத்து, கொழுப்பு எண்ணெய் ஆகியவை மிக முக்கியம். அசைவ உணவுகளில் இருந்துதான் இது அதிக அளவில் கிடைக்கிறது. இருந்தபோதிலும், பால், நெய், வெண்ணெய் ஆகியவற்றில் இருந்தும் இதனை பெறலாம். ஆனால் வீகன் டயட்டில் பால், நெய், முட்டை என எதுவும் சேர்க்க மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு இந்த அத்தியாவசிய சத்துகள் கிடைக்காமல் போகிறது. இதுவே சில ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்” என எச்சரிக்கின்றனர்.