இந்தியாவின் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் பசும்பால் விற்று கோடிக்கணக்கில் பங்களா கட்டி சாதித்து காட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்தவர் பிரகாஷ் இப்தே, இவரது குடும்பம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்துள்ளது.
இந்நிலையில் கடும் வறட்சியின் காரணமாக விவசாயத்தை விட்டுவிட்டு 1998ம் ஆண்டு முதல் பால் வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளார்.
லட்சுமி என்ற ஒரே ஒரு பசுவை கொண்டு பால் வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.
முதலில் அவருடைய கிராமத்தினருக்கு மட்டுமே பாலை விற்று பிழைப்பு நடத்தியுள்ளார்.அடுத்து படிப்படியாக தன்னுடைய தொழிலை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளார் பிரகாஷ் இப்தே.
இதற்கிடையே 2006ம் ஆண்டு லட்சுமி இறந்து போயுள்ளது, எனினும் லட்சுமியின் படத்துக்கு நாள்தோறும் தவறாமல் பூஜை செய்து வருகிறார்.
இன்று 150 மாடுகளை பராமரித்து வரும் பிரகாஷ் இப்தேவின் பண்ணையில், தினமும் 1000 லிட்டர் பால் உற்பத்தியாகிறது.
பிரகாஷ் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரின் கடின உழைப்பின் விளைவாக, தற்போது 1 கோடி ரூபாய் செலவில் அழகான பங்களாவை கட்டியுள்ளார்.
கோதன் நிவாஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த பங்களாவின் மேல்பகுதியில் பசுமாட்டின் சிலை மற்றும் பால் கேன் ஒன்றை வைத்து தொழில் மீதான ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுவரையிலும் கன்றுக்குட்டியை கூட பிரகாஷ் விற்கவில்லையாம், தினமும் 4 முதல் 5 டன் மாட்டுத்தீவனங்கள் தேவைப்படுவதாகவும், அதையும் அவருடைய பண்ணையிலிருந்தே உற்பத்தி செய்தும் கொள்கிறாராம்.படிப்படியாக தொழில் உத்திகளை கற்றுக்கொண்டு முன்னேறிய பிரகாஷ், தன் தொழில் பற்றி மற்றவர்களுக்கும் சொல்லித் தருகிறாராம், இவரது ஆலோசனைகள் கேட்க மற்ற மாநிலத்தில் இருந்து ஆட்கள் வருகிறார்கள், அவர்களுக்கு சொந்த பண்ணையை சுற்றிக்காண்பித்து தொழில் பற்றி விவரிக்கிறார் பிரகாஷ்.