மங்கூஸ் எனப்படும் கீரிப்பிள்ளை ஒரு சிறிய மாமிசப் பாலூட்டி விலங்காகும். இயற்கையின் மிகவும் அச்சமூட்டும் உயிரினங்களில் ஒன்றான பாம்புகளை, தைரியமாக எதிர்க்கும் திறனுக்குப் புகழ் பெற்றவை. பெரும்பாலான விலங்குகள் இயல்பாகவே பாம்புகளுக்கு அஞ்சும் வேளையில், கீரிப்பிள்ளைகள் மட்டும் விதிவிலக்காக உள்ளன. இந்தப் பதிவில் மங்கூஸ்கள் ஏன் பாம்புகளைக் கண்டு பயப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.
உடல் திறன்கள்: பாம்புகள் முன்னால் கீரிகள் பயமின்றி இருப்பதற்கான முதன்மை காரணங்களில் ஒன்று, அதன் தனித்துவமான உடல் திறன்களாகும். மங்கூஸ்கள் மெல்லிய உருவம், சுறுசுறுப்பான உடல் மற்றும் கூர்மையான நகங்களைக் கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக பாம்புகளின் தாக்குதலை இவற்றால் துல்லியமாகத் தவிர்க்க முடிகிறது. இவற்றின் மிகச் சிறந்த வாசனை உணர்வு மற்றும் செவிப்புலன் ஆகியவை பாம்புகளை துல்லியமாகக் கண்டறிந்து தாக்க உதவுகிறது.
பாம்பு விஷத்திற்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல்: மற்ற விலங்குகளைப் போலல்லாமல், கீரிப்பிள்ளைகள் பாம்பு விஷத்தை எதிர்க்கும் நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளன. எனவே பாம்புகளின் விஷம் இவற்றை எதுவும் செய்வதில்லை என்பதால், பாம்புகளுடன் சண்டையிடும்போது இது கீரிப்பிள்ளைகளுக்கு அட்வான்டேஜாக உள்ளது.
வேட்டையாடும் நுட்பங்கள்: மங்கூஸ்கள் சிறந்த வேட்டையாடிகள். பாம்புகள் உட்பட பல்வேறு இரைகளை தந்திரமாக வேட்டையாடும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. இவற்றின் சுறுசுறுப்பு, வேகம் மற்றும் அனிச்சை செயல்களைப் பயன்படுத்தி, பாம்புகளை விடவும் வேகமாகத் தாக்கும் திறன்களைக் கொண்டிருக்கின்றன.
ஒரு பாம்பு கீரிப்பிள்ளையை தாக்கும்போது, உடனடியாக அதிலிருந்து விலகி எதிர்த்தாக்குதலை செய்கிறது. குறிப்பாக பாம்பின் தலை அல்லது கழுத்து போன்ற பகுதிகளை இவை குறி வைத்து தாக்குவதால், பாம்புகள் இவற்றால் வீழ்த்தப்படுகின்றன.
கற்றல் மற்றும் அனுபவம்: மங்கூஸ்கள் அவற்றின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, அதற்கேற்ப தங்களின் நடத்தையை மாற்றியமைத்துக் கொள்கின்றன. இதுவே பாம்புகள் மீதான அச்சமின்மைக்குக் காரணமாக அமைகிறது. குறிப்பாக, அவற்றின் சமூகத்தில் இருக்கும் வயதான கீரிப்பிள்ளைகளின் நடத்தைகளை கவனித்து, அறிவை வளர்த்துக்கொள்வதால், பாம்புகளை எவ்வாறு திறம்பட கையாள வேண்டும் என்ற புரிதல் அவற்றிற்கு ஏற்படுகிறது. இத்தகைய காரணங்களினாலேயே மங்கூஸ்கள் பாம்புகளை பயமின்றித் தாக்குகின்றன.