அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் சான் ஜோஸில் சேர்ந்தவர் 40 வயதான லாரா பராஜாஸ் என்ற பெண். இவர் சான் ஜோஸில் உள்ள மீன் சந்தையில் திலோபியா மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் லாரா பராஜாஸ்.
அவருடைய விரல்கள், கால்கள் உதடு ஆகியவை கருப்பு நிறத்தில் மாறின. அவருடைய சிறுநீரகங்கள் செயலிழந்தன. பின்னர் கோமா நிலைக்கு சென்ற அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவருடயை கை கால்கள் முற்றிலும் செயலிழந்து அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவருடைய 2 கைகள் மற்றும் 2 கால்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது. பராஜாஸ், விப்ரியோ வல்னிஃபிகஸால் எனும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இவை கடல் உணவு மற்றும் கடல் நீரில் காணப்படும் ஒரு கொடிய உயிர்க்கொல்லி பாக்டீரியா ஆகும்.
மீனை சரியாக சமைத்து சாப்பிடாததால் மீனில் இருந்த பாக்டீரியா பராஜாஸ் உடம்பில் தீவிரமான தொற்றாக பரவி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பராஜாஸ் உடன் திலாபியா மீனை சாப்பிட்ட அவரது தோழி மெஸினா, பராஜாஸ் கிட்டதட்ட இறந்துவிட்டதாகவும் செயற்கை சுவாசத்தில்தான் அவர் உயிர் வாழ்கிறார் என்றும் கூறியுள்ளார்.
கெட்டுப்போன அல்லது பச்சையான உணவை மற்றும் சரியாக சமைக்காத கடல் உணவை சாப்பிடுவதன் மூலம் இந்த தொற்று ஏற்படலாம் என்றும் டாட்டூ போட்டுக் கொண்டவர்கள் அல்லது உடலில் வெட்டுக்காயம் இருப்பவர்கள் இந்த பாக்டீரியா வாழும் இருக்கும் நீரில் குளிப்பதன் மூலம் இந்த தொற்று ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இந்த பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மீனை சரியாக சமைக்காமல் சாப்பிட்ட பெண் ஒருவர் தனது இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை இழந்த சம்பவம் பெரும் மீன் பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.