“இது எங்க நாடு.. ” கனடா மக்களையே கனடாவிலிருந்து வெளியே போக சொன்ன காலிஸ்தான் பிரிவினைவாதிகள்! பதற்றம்!

ஒட்டாவா:

கனடா நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சுதந்திரமாக இயங்கி வரும் நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே இப்போது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் ஒரு வினோத சம்பவத்தைச் செய்துள்ளனர். அதாவது கனடா தங்கள் நாடு என்றும் கனடா நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

கனடா: 

நமது நாட்டில் காலிஸ்தான் பிரிவினை இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், பல வெளிநாடுகளில் காலிஸ்தான் இயக்கங்களுக்குத் தடை இல்லை. இதனால் அங்கே அவர்கள் சுதந்திரமாக இயங்கி வருகிறார்கள். குறிப்பாகக் கனடா நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பிரச்சினை அதிகமாகவே இருக்கிறது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். அதிலும் இந்தியாவின் சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட தினங்களில் வேண்டும் என்றே பிரச்சினை செய்வதே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வழக்கமாகக் கொண்டு இருந்தனர். இதற்கிடையே இப்போது மீண்டும் அங்கு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பிரச்சினை செய்துள்ளனர். அதுவும் கனடா நாட்டு மக்களுக்கு எதிராகவே பிரச்சினை செய்துள்ளனர்.

கனடா மக்கள்: 

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இது கனடாவின் சர்ரே என்ற பகுதியில் எடுக்கப்பட்டது போலத் தெரிகிறது. அங்கு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் எல்லாம் சேர்ந்து ஒரு அணிவகுப்பை நடத்தியுள்ளனர். காலிஸ்தான் ஆதரவு கொடிகள் அதில் தெளிவாகத் தெரிகிறது. அந்தக் கூட்டத்தில் தான் கனடா மக்களுக்கு எதிராக அவர் குரல் எழுப்பியுள்ளனர். “வெள்ளை இன மக்கள் ஐரோப்பாவிற்கும் இஸ்ரேலுக்கும் திரும்பிச் செல்ல வேண்டும்” என்று கத்துவதும் தெளிவாகக் கேட்கிறது.

கனடா நாட்டு மக்களை “படையெடுப்பார்கள்” என்றும் “இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றும் கோஷமிட்டுள்ளனர். சுமார் 2 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், “இது கனடா.. எங்கள் சொந்த நாடு. நீங்கள் [கனடா நாட்டவர்] உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று சொல்லி பேரணியை நடத்தியுள்ளனர்.

உளவுத் துறை: 

கனடா நாட்டில் சமீப காலங்களாகவே இதுபோன்ற சம்பவங்களே அதிகம் நடப்பதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகிறது. கனடாவில் இருக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சரியாகக் கண்காணிக்கப்படுவதில்லை என்றும் இதனால் அங்குள்ள முக்கிய அதிகார கட்டமைப்புகளை மெல்ல காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைப்பற்றுவதாகவும் உளவுத் துறை வட்டாரங்கள் கூறுகிறது.

இந்திய கனடா உறவு:

 கடந்தாண்டு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டதில் இருந்தே இந்தியா கனடா இடையேயான உறவு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கூறுவதே இதற்குக் காரணமாகும். அதேநேரம் கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் தங்கள் தூதர்களை வாபஸ் பெற்றன.

முன்னதாக கனடாவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குறிவைப்பதாகக் கனடாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மா தெரிவித்தார். மாணவர்களுக்கு உதவுவது போல நடித்து மெல்ல அவர்களை ஏமாற்றுவதாக சஞ்சய் குமார் வர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Prayer Times