சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்து நாட்டில் சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்னர் பனி மலையில் காணாமல் போனவரின் சடலம் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த சடலம் கொஞ்சம் கூட அழுகவில்லை என்பதுதான். சுவிட்டர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரின் ஒரு பகுதிதான் தியோடுல் பனிப்பாறை. இங்கு வழக்கமாக மக்கள் மலையேற்ற பயிற்சியை மேற்கொள்வார்கள். இதில் சிலர் மட்டும் மலையின் உச்சி வரைக்கும் சென்று திரும்புவார்கள். ஆனால் வானிலை மோசமாக இருந்தாலோ, அல்லது மலை ஏற்றத்தில் ஏதேனும் சின்ன பிசிரு தட்டினாலோ ஆபத்து நிச்சயம். இருப்பினும் இந்த ஆபத்தை எதிர்கொண்டு மலையின் மீது பயணிப்போர், மலையேற்ற வீரர்களாக பரிணமிக்கின்றனர்.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 12ம் தேதியன்று மலையேற்ற வீரர்கள் குழு ஒன்று தியோடுல் பனிப்பாறை மீது ஏறியது. அப்போது பாதி வழியில் பூட்ஸ் ஒன்றை பார்த்திருக்கின்றனர். பனி மலையில் இப்படி பூட்களை எளிதில் பார்க்க முடியாது. ஏனெனில் பூட் இல்லாமல் இந்த மலை மீது ஏறவே முடியாது. எனுவே பூட் இருந்த இடத்தை வீரர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போதுதான் ஒரு ஆண் சடலம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கவே உடனடியாக அந்த சடலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது
போலீசின் முதல் கட்ட விசாரணையில் இந்த சடலம் கடந்த 1986ம் ஆண்டு மலையேற்றத்தில் ஈடுபட்டு காணாமல் போன ஜெர்மனியை சேர்ந்தவருடையது என்பது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கொண்ட டிஎன்ஏ பரிசோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஜெர்மனியை சேர்ந்த நபர் தனது 38வது வயதில் இம்மலையின் மீது ஏறி இருக்கிறார். அப்போது அவர் திரும்ப வரவில்லை. எனவே அக்கம் பக்கம் தேடியுள்ளனர். 37 ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய அளவுக்கு தொழில்நுட்பம் இந்த பகுதியில் இருக்கவில்லை. எனவே அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து சில மலையேற்ற வீரர்கள் இவரது சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். தடயவியல் ஆய்வு மற்றும் டிஎன்ஏ பரிசோதனையில் சடலம் அவருடையதுதான் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்த மலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறையல்ல. தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனி கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக முன்பு இருந்ததை விட பனி வேகமாக உருகி வருகிறது. இதன் காரணமாக கடந்த 2015ம் ஆண்டும் இதேபோல 45 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஒரு மலையேற்ற வீரரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர மனிதர்கள் பயன்படுத்தி தூக்கியெறிந்த சில பிளாஸ்டிக் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.