வியட்நாம்: 1000 Babies சீரிஸ் போல மாற்றிவைக்கப்பட்ட குழந்தைகள்? DNA சோதனையில் தெரியவந்த பகீர் உண்மை!

வியட்நாமில் தனது மகள் தன்னையோ அல்லது தனது மனைவியையோ ஒத்திருக்கவில்லை என்பதை கவனித்த தந்தை டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார். அந்த சோதனையில், அந்த குழந்தைக்கு அவர் உயிரியல் தந்தை இல்லை என்பது தெரியவந்தது.

வியட்நாமில் தனது மகள் தன்னையோ அல்லது தனது மனைவியையோ ஒத்திருக்கவில்லை என்பதை கவனித்த தந்தை டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார். அந்த சோதனையில், அந்த குழந்தைக்கு அவர் உயிரியல் தந்தை இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அடுத்தடுத்து நடந்த சூழல் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு தவறை வெளிச்சம் போட்டு வெளிக்கொண்டு வந்துள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்…

வியட்நாமில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் ஹோசிமின் நகருக்கு குடிபெயர்ந்து அங்கு பல ஆண்டுகள் வசித்து வந்துள்ளார். அவரது மகளும் தனது பதின்ம வயதிற்குள் நுழைந்துள்ளார். இத்தகைய சூழலில், தனது மகள் தன்னைப்போலவோ அல்லது தனது மனைவியைப் போலவோ இல்லை என்பதை அந்நபர் கவனித்து வந்துள்ளார். சந்தேகம் வலுத்த நிலையில், மரபணு பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார். பரிசோதனையின் முடிவு அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அந்த பெண்ணுக்கு அவர் உயிரியல் தந்தை இல்லை என்பது தெரியவந்தது. இது வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னையாக வெடித்துள்ளது. தொடர்ச்சியாக, மதுவுக்கு அடிமையாகி, தனது மனைவியிடம் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார்.

ஆனால், அவரது குற்றச்சாட்டுகளை மறுத்த மனைவி, அவரிடம் இருந்து பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கணவரை விட்டு தனியாக வந்த நிலையில், தனது மகளின் பள்ளியையும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில்தான் மகளைச் சுற்றி இருந்த பல்வேறு முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன.

அதன்படி அந்த பள்ளியில், அவரது மகளுக்கு புதிய தோழி கிடைத்துள்ளார். தோழியுடனான உரையாடலில் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் பிறந்தது தெரியவந்துள்ளது. இருவரது நட்பு இரு குடும்பத்தினரையும் நட்பாக்கியுள்ளது.

இருவரும் தங்களது பிறந்தநாளுக்கு ஒருவருக்கொருவர் அழைப்பு விடுத்துக் கொண்டுள்ளனர். இதன் வழியாக இரு குடும்பத்தினரும் சந்தித்துள்ளனர். இரு தாயார்களும் தங்களது மகள்களை பார்த்து ஏதோ தவறு நடந்திருப்பதை உணர்ந்து இருதரப்பும் பேசி மரபணு சோதனை மேற்கொள்வதற்கு முடிவெடுத்துள்ளனர். (இரு அம்மாக்களுக்கும், தாங்கள் வளர்ந்த குழந்தை தங்கள் குழந்தை இல்லை என்ற உணர்வும்… அதுவே இன்னொரு குழந்தை தங்கள் குழந்தை என்றும் தோன்றியுள்ளது

மரபணு சோதனையில் இது உறுதியாகியுள்ளது. அதில்தான், இத்தனை ஆண்டுகள் குழந்தைகள் மாற்றி வளர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. குழந்தைகள் மருத்துவமனையில் மாற்றப்பட்டிருக்கலாம் என்ற முடிவிற்கு இருதரப்பும் வந்துள்ளனர். தாங்கள் பிரசவித்த மருத்துவமனையின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.

இருதரப்பினரும் தற்போது ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விபரங்கள் ஏதும் சிறுமிகளுக்குத் தெரியாது என்பதும், ஆனால், உரிய நேரத்தில் குழந்தைகளிடம் தெரிவிப்பதில் இரு தரப்பினரும் தெளிவாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவால் ஒரு பெண் எத்தைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார் என இணையத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் வந்த 1000 Babies என்ற வெப்சீரிஸில் 1000 குழந்தைகள் செவிலியர் ஒருவரால் வேண்டுமென்றே மாற்றிவைக்கப்படுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். அதையொத்து இந்த நிகழ்வு இருப்பதாக, இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Prayer Times