லண்டன்: சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்ணின் முகத்தை ஆய்வாளர்கள் இப்போது தத்ரூபமாக உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
பண்டைக் காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்தே வருகிறது. இது மனிதர்கள் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதைக் கண்டறிய உதவுகிறது.
உலகெங்கும் இதற்காக அகழாய்வு பணிகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் மீண்டும் உருவாக்கியுள்ளனர்.
பெண்ணின் முகம்: சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஆங்கிலோ-சாக்சன் பெண் பார்க்க எப்படி இருப்பார் என்பதை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டில் அந்த பெண்ணின் எலும்புக்கூட்டை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
பிரிட்டன் நாட்டின் கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள டிரம்பிங்டனில் தங்கம் மற்றும் கார்னெட் சிலுவையுடன் 7ஆம் நூற்றாண்டில் புதைக்கப்பட்ட அந்த பெண்ணின் எலும்புக் கூட்டை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையே நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் அந்த பெண்ணின் முகத்தை ஆய்வாளர்கள் கட்டமைத்துள்ளனர். 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்த பெண் பார்க்க எப்படி இருப்பார் என்பதை விளக்கும் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியிடப்பட்டது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியது பலருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன: இது தொடர்பாகத் தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் சாம் லூசி கூறுகையில், “நான் முகம் தெரியாத பல நபர்களின் உடல்களை ஆய்வு செய்துள்ளேன். அவர்கள் முகம் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே அவர்களின் பழக்கம், உணவு முறை எனப் பல விஷயங்களை ஆய்வு செய்துள்ளேன். இப்போது பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தைப் பார்ப்பது சற்று மகிழ்ச்சியாகவே இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.மண்டை ஓடு மற்றும் திசு ஆழம் குறித்த தரவுகளை வைத்து தடயவியல் கலைஞர் ஹெவ் மோரிசன் இந்தப் பெண்ணின் முகத்தை மீண்டும் உருவாக்கியுள்ளார். டிஎன்ஏ ஆய்வு இல்லாமல் கண் மற்றும் முடி நிறம் இப்படி தான் இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார் ஹெவ் மோரிசன்.. இருப்பினும், அவர் உயிரிழக்கும் முன் இப்படி தான் இருந்திருப்பார் என்றே அவர் கூறுகிறார்.
மோரிசன் மேலும் கூறுகையில், “அவரது முகத்தை மெல்ல டெவலப் செய்து அந்தளவுக்கு எடுத்து வந்ததில் சுவாரஸ்யமாக இருந்தது. அவளது இடது கண் வலது கண்ணை விட அரை சென்டிமீட்டர் கீழே இருந்தது. இவை எல்லாம் மண்டை ஓட்டை வைத்தே எங்களால் உறுதி செய்ய முடிந்தது” என்று அவர் தெரிவித்தார்.எங்கே வாழ்ந்தார்: அந்தப் பெண் ஆல்ப்ஸ் மலைக்கு அருகில், அநேகமாக தெற்கு ஜெர்மனியில் பிறந்திருப்பார். அவர் ஏழு வயது வந்தடைந்த பிறகு, கேம்பிரிட்ஜ்ஷயர் ஃபென்ஸ் என்ற இடத்திற்கு வந்துள்ளார். அவர் இங்கிலாந்து சென்றவுடன் அவரது உணவு முறை மாறியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் சாம் லூசி கூறுகையில், “அவர் உடலில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புரதத்தின் விகிதம் குறைந்துள்ளது. ஜெர்மனியில் இருந்த போது அவர் அதிகளவில் இறைச்சி மற்றும் பால் பொருட்களைச் சாப்பிட்டுள்ளார். ட்ரம்பிங்டனுக்கு வந்த பிறகு அவர் எடுத்துக் கொள்ளும் இறைச்சி மற்றும் பால் பொருட்களின் அளவு குறைந்துள்ளது” என்றார்.அந்த இளம் பெண்ணுக்கு நோய்ப் பாதிப்பு இருந்துள்ளது. இருப்பினும், அவரது மரணத்திற்கு என்ன காரணம் எனத் தெளிவாகத் தெரிவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிலுவை, தங்க ஊசிகள் மற்றும் மெல்லிய ஆடைகளை அவரது உடலுக்கு அணிவித்துப் புதைத்துள்ளனர்.
மேலும், செதுக்கப்பட்ட மரப் பெட்டியில் அந்த பெண்ணை அடக்கம் செய்துள்ளனர். இது கடந்த காலங்களில் பெண்களின் வாழ்க்கை முறையை விளக்கும் வகையில் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.