அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை ராணுவ பலத்துடன் ஆக்கிரமிக்க உள்ளதாக கூறிய கருத்தை திரும்பப் பெற மறுத்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் எதிர்வினையாற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அதன் “இறையாண்மையில்” அத்துமீற மற்ற நாடுகளை அனுமதிக்காது என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று, டிரம்ப் தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை வசப்படுத்துவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார். இது அமெரிக்காவின் தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு “முக்கியமானது” என்று அவர் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், பிரெஞ்சு வானொலியில் பேசுகையில், “ஐரோப்பிய ஒன்றியம் உலகின் பிற நாடுகள் அதன் இறையாண்மையில் அத்துமீறுவதை அனுமதிக்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்காது” என்றார்.
பரந்து விரிந்த ஆர்க்டிக் தீவில் அமெரிக்கா படையெடுக்கப் போகிறது என்பதை நம்ப முடியவில்லை என்று பரோட் கூறினார்.
டிரம்ப் பலமுறை கிரீன்லாந்தை பெறுவதற்கான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அதிபராக தனது முதல் பதவிக் காலத்திலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.
அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடான டென்மார்க், `கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை’ என்றும் `அது தன் குடிமக்களுக்கு சொந்தமானது’ என்றும் தெளிவுபடுத்தியது.
கிரீன்லாந்தின் பிரதமர் மூட் எகெடே, தங்களது பிரதேசம் விற்பனைக்கு இல்லை என்று கூறியுள்ளார். அவர் புதன்கிழமை டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனுக்குச் சென்றிருந்தார். அங்கு இந்த கருத்தை முன்வைத்தார்.
டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ ரெசார்டில் ஒரு செய்தி மாநாட்டில் இதுபற்றி கருத்து தெரிவித்தார்.
கிரீன்லாந்தையோ அல்லது பனாமா கால்வாயையோ கையகப்படுத்துவதற்கு ராணுவம் அல்லது பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவதாக கூறியதை நிராகரிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, டிரம்ப் இவ்வாறு பதிலளித்தார்,
“இல்லை, அதனை நிராகரிக்க முடியாது. அவ்வாறு நடக்காது என நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியாது.” என்றார்.
“ஆனால் நான் ஒன்றை மட்டும் தீர்க்கமாக சொல்ல முடியும், பொருளாதார பாதுகாப்பிற்கு எங்களுக்கு அது தேவை.”என்றும் டிரம்ப் கூறினார்.