அமெரிக்காவின் நியூ ஆர்லீன்ஸ் நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே ஒருவர் டிரக்கை விட்டு மோதியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. டிரக் ஓட்டுநர் வேண்டுமென்றே டிரக்கை விட்டு மோதியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
நியூ ஆர்லீன்ஸ் நகரின் பிரபலமான போர்பன் ஸ்ட்ரீட்டில் புத்தாண்டு பரபரப்புகளுக்கு இடையே, மக்கள் மத்தியில் டிரக் மோதியதில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
டிரக் ஓட்டுநர் கூட்டத்திற்கு நடுவே வேண்டுமென்றே டிரக்கை மோதியதாகவும், டிரக்கின் உள்ளே இருந்து மக்களை நோக்கி சுட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. டிரக் ஓட்டுநர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
உள்ளூர் காவல்துறை தலைமை அதிகாரி ஆன் கிர்க்பேட்ரிக் கூறுகையில், முடிந்தவரை அதிகமானோர் மீது மோதுவதற்கு முயற்சிக்கும் வகையில் டிரக்கை அதன் ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டிவந்ததாக தெரிவித்தார்.
“உள்ளூர் நேரப்படி காலை 3:15 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை வைத்திருந்த தடுப்பையும் அவர் மோதியுள்ளார். டிரக்கின் உள்ளே இருந்து அவர் சுட்டதில் காவல்துறையை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (ஜனவரி 01) அன்று காலை 3:15 மணியளவில் போர்பன் ஸ்ட்ரீட்டில் ஒருவர் மிக வேகமாக டிரக்கை ஓட்டிவந்து, வாகனத்தின் உள்ளே இருந்து காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
டிரக் மோதியதில், 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குறைந்தது 35 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எஃப்.பி.ஐ இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகிறது. இச்சம்பவம் தீவிரவாதத் தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
“புத்தாண்டு அன்று வேண்டுமென்றே மக்களை ஒருவர் கொலை செய்துள்ளார் என்ற செய்தியுடன் நாங்கள் விழித்துள்ளோம்,” என லூசியானா மாகாணத்தின் மூத்த வழக்கறிஞர் லிஸ் முரியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
“இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.