வெளி நாடுகளில் படிக்கச் சென்ற 403 மாணவர்கள் உயிரிழப்பு… மத்திய அரசு ஷாக் ரிப்போர்ட்!

தங்கள் குழந்தைகள் சிறந்த கல்வி வாய்ப்புகளை பெற வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் சிறப்பான வேலையில் அமர வேண்டும் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு கல்வி கற்க அனுப்புகின்றனர். ஆனால் சில நேரங்களில் வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் கனவுகள் சோகத்தில் முடிந்து விடுகின்றன. குற்ற சம்பவங்கள், எதிர்பாராத விபத்துகள் அல்லது இயற்கை காரணங்களால் வெளிநாட்டில் பிரகாசமான எதிர்காலத்தை தேடி செல்லும் மாணவர்களின் வாழ்க்கை சோகத்தில் முடிந்து விடுகிறது. ஆசை ஆசையாக வெளிநாட்டிற்கு தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்பிய பல குடும்பங்கள், அங்கே அவர்களுக்கு நிகழும் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுத்திய மனவேதனைகள் மற்றும் சவால்களிலிலிருந்து மீள முடியாமல் பல ஆண்டுகள் கண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இயற்கையான காரணங்கள், தற்கொலைகள் மற்றும் விபத்துக்கள் உள்ளிட்ட பல காரணங்களால் குறைந்தது 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய மாணவர்கள் அதிகம் இருக்கும் 34 நாடுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 2018 – 2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், கனடாவில் தான் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் அதிகம் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.முரளீதரன் ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

மத்திய அமைச்சர் சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தரவுகளின் அடிப்படையில், 2018-ஆம் ஆண்டு முதல் கனடாவில் சுமார் 91 இந்திய மாணவர்கள் இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் 48 இந்திய மாணவர்களும் , ரஷ்யாவில் 40 இந்திய மாணவர்களும், அமெரிக்காவில் 36 இந்திய மாணவர்களும், ஆஸ்திரேலியாவில் 35 இந்திய மாணவர்களும், உக்ரைன் நாட்டில் 21 இந்திய மாணவர்களும், ஜெர்மனியில் சுமார் 20 இந்திய மாணவர்களும், சைப்ரஸ் நாட்டில் 14 இந்திய மாணவர்களும், இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் தலா 10 இந்திய மாணவர்களும் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் முரளிதரன், வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, தனிநபர் வழக்குகளைத் தீர்ப்பதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பதற்கு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு என்பது மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும் முன்னுரிமைகளில் ஒன்றாகும். எனவே விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும் மற்றும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வெளிநாடுகளில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களது சங்கங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க இந்திய தூதரகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அடிக்கடி செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல ஏதேனும் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், அது உடனடியாக குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சம்பவம் குறித்து முறையாக விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய அங்கிருக்கும் இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் ஏதேனும் பாதிப்புகளை சந்தித்தால் அவசர மருத்துவ உதவி, தங்கும் வசதி போன்ற உதவிகளுக்கு விரைந்து முதலில் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் உடனடியாக செய்து தரப்படும் என்றார்.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times