ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடந்த ஜி20 மாநாட்டில், உலகத் தலைவர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் குழு புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் தவற விட்டனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பங்கேற்பது இது கடைசி முறையாகும். டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், பருவநிலை மாநாடு மற்றும் உக்ரைன் விவகாரத்தில் ஒரு மித்த கருத்தை எட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
ஜி20 மாநாடு முடிந்த பிறகு உலக தலைவர்கள் அனைவரும் வழக்கமாக குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வுக்காக ஒன்று சேர்ந்தனர். அங்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோர் கலந்துரையாடினர். தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதன் பிறகு தான், இந்த நிகழ்வை ஜோ பைடன் தவற விட்டது தெரியவந்தது. இவர், மட்டுமின்றி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் இந்த நிகழ்வை தவற விட்டுள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது : தலைவர்கள் வருவதற்கு முன்னரே முன்கூட்டியே புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டது. இதனால், சில தலைவர்கள் புகைப்படத்தில் இடம்பெறவில்லை. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜோ பைடன் புகைப்படம் எடுக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, பல தலைவர்கள் புகைப்படம் எடுத்த பிறகு சென்றுவிட்டது தெரியவந்தது. இதற்கு அங்கிருந்த சில நடைமுறைச் சிக்கல்களே காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.