ஈரான் கெர்மானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 103 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்புகளில் படுகாயமடைந்த 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மீது ஈரான் கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. ஆனால் சுலைமானி படுகொலையை அமெரிக்கா அப்போது நியாயப்படுத்தியது. குறிப்பாக அமெரிக்கா அதிபராக இருந்த டிரம்ப் இப்படுகொலையை நியாயப்படுத்தி இருந்தார்.
இந்த பின்னணியில் ஈரானின் கெர்மானில் காசிம் சுலைமானி கல்லறையில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இன்று கூடியிருந்தனர். அப்போது அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் தற்போது வரை 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் படுகாயமடைந்த நிலையில் 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் ஈரானை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நூற்ற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டுகள் ரிமோட் மூலம் வெடிக்கச் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.