காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்தவகையில் மேற்கு ஆசிய நாடான ஈரானில் கடும் வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக தலைநகர் டெஹ்ரானில் 107 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதனால் 200-க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே சமயம் வெப்ப அலை காரணமாக அங்கு மின்சார நுகர்வும் பல மடங்கு அதிகரித்தது. எனவே மின்சார ஆற்றலை சேமிக்க அங்குள்ள வங்கி, அரசு அலுவலகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆஸ்பத்திரி உள்ளிட்ட அவசர சேவை நிறுவனங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் பகல் நேரங்களில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு அதிக வெப்பநிலை காரணமாக 2 நாட்கள் நாடு தழுவிய விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.