மருத்துவத் துறையில் வியத்தகு சரித்திர சாதனைகள் படைக்கப்படுவதுண்டு. அதேநேரத்தில், சில சூழ்நிலைகளால் தவறான அறுவைச்சிகிச்சைகளும் அரங்கேறுவது உண்டு. அதாவது, இடதுகாலுக்குப் பதில் வலதுகாலில் அறுவைச்சிகிச்சை செய்யப்படுவதும், குடும்ப கட்டுப்பாடு அறுவைச்சிகிச்சை செய்வதற்கு பதிலாக இருதயத்திற்குச் செல்லும் குழாயில் அறுவைச்சிகிச்சை செய்யப்படுவதும் உண்டு.
இன்னும் சில மருத்துவமனைகளில் அலட்சியம் காரணமாக, நோயாளிகளை மாற்றிக்கூட அறுவைச்சிகிச்சை செய்யப்படுவது உண்டு. அப்படியான ஒரு சம்பவம்தான் செக் குடியரசில் நடைபெற்றுள்ளது.
செக் குடியரசின் பிராக் நகரில் உள்ள புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், கடந்த மார்ச் 25ஆம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவப் பணியாளரிடம் தனக்கான பரிசோதனை குறித்து கூறியிருக்கிறார்.
ஆனால், அவர் பேசிய மொழியைச் சரியாக புரிந்துகொள்ளாத மருத்துவமனை ஊழியர்கள், அந்தப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யவேண்டும் என தவறாக நினைத்து, அதற்கான வார்டுக்கு அனுப்பி உள்ளனர்.
அங்கு ஏற்கெனவே வேறு பெண்ணுக்கு கருக்கலைப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தனர். அந்த வார்டில் உள்ளவர்களும் சரியாக விசாரித்து உறுதிசெய்யாமல் ஆரோக்கியமாக இருந்த அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளனர். இந்த தவறுக்கு ஒட்டுமொத்த மருத்துவமனையின் அலட்சியமே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
அதாவது மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர் மற்றும் மயக்க மருந்து நிபுணர் என யாரும் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். மேலும், மொழிப்பிரச்னையும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. தற்போது இந்த தவறான சிகிச்சைக்கு காரணமான ஊழியர்களை மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.