லெபனானுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்: கத்தார் அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் எல்லையையொட்டிய இஸ்ரேல் பகுதிகளில் தினந்தோறும் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருகிறது.

இது அங்கு வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களை இடம் பெயர செய்தது. இதனால் ஹிஸ்புல்லா அமைப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் முடுக்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக முன்னெப்போதும் இல்லாத வகையில் லெபனான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் கடந்த மாத இறுதியில் தொடங்கியது.

தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. அப்படி பெய்ரூட்டில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் கடும் கோபத்துக்கு ஆளான ஈரான் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த துணிந்தது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் நாட்டின் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கிறது.

நேற்று தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகின. பெய்ரூட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மீது குண்டு வீசப்பட்டதில் அந்த கட்டிடம் தரைமட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, லெபானானில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள கத்தார் முன்வந்துள்ளது. இது தொடர்பாக கத்தார் மன்னர் தமிம் பின் ஹமாத் அலி தானி கூறியதாவது: லெபனானில் சண்டையினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த கொடூரமான தாக்குதல் விவகாரத்தில் லெபானானுக்கு கத்தார் முழு ஆதரவு அளிக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times