வரும் 2027ம் ஆண்டு விண்வெளி சுற்றுலாவுக்கான டிக்கெட் விற்பனையை சீனாவைச் சேர்ந்த டீப் ப்ளூ ஏரோஸ்பேஸ் நிறுவனம் இன்று தொடங்குகிறது.
இதுவரை ஆய்வு நோக்கத்திற்காக மட்டுமே விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு சென்று வந்த நிலையில், தற்போது சுற்றுலாப் பயணியாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டது. ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் ஜாரெட் ஐசக் மேன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டனர்.
இந்தப் பயணம் வெற்றியடைந்த நிலையில் விண்வெளி சுற்றுலாவில், ஆய்வு நிறுவனங்கள் தீவிரம் காட்ட தொடங்கி விட்டனர். அதில், ப்ளூ ஓரிஜின் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.
இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த டீப் ப்ளூ ஏரோஸ்பேஸ் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம், 2027ம் ஆண்டு விண்வெளி சுற்றுலாவுக்கான முதல் இரு டிக்கெட்டுக்கான விற்பனையை இன்று தொடங்கியுள்ளது. சப் ஆர்பிட்டல் விமானத்தில் சுற்றுலாப் பயணிகள் அழைத்து செல்லப்பட இருப்பதாகவும், விண்வெளிக்கு செல்லும் இந்த ராக்கெட், சுற்றுப்பாதைக்குள் நுழையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டுள்ளது.விண்வெளி சுற்றுலாப் பயணத்திற்கு மறுபயன்பாட்டு ராக்கெட்டுக்கள் முக்கிய பங்களிப்பதாக டீப் ப்ளூ ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது.