வெளிநாட்டில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் சவூதி வரும்போது, அதிக அளவு பணம் பற்றும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிதி மோசடிகளைத் தவிர்ப்பதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் படி, யாத்ரீகர்களை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சமூக ஊடகங்களில், தங்கக்கட்டிகள், விலையுயர்ந்த கற்கள் மற்றும் விலைமதிப்புள்ள உலோகம் போன்றவற்றை புனித பயணத்தின் போது கொண்டுவர வேண்டாம் என்றும், அதிகபட்சமாக $16,000 (60,000 சவூதி ரியால்) ரொக்கமாக எடுத்துச் செல்லுமாறும் ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு நாணயத்தை மாற்றும் போது, யாத்ரீகர்கள் அங்கீகரிக்கப்பட்ட பெற்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் வங்கி அட்டைத் தகவலை தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், பணம் செலுத்தும் முன் மின்னணு இணைப்புகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்றும் யாத்ரீகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவிற்குள் பணப் பரிவரத்தனைகளை மேற்கொள்ளும்போது, யாத்ரீகர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய அனைத்து ரசீதுகள், காகிதம் மற்றும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கான ஆதாரம் ஆகியவற்றை அவர்கள் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அனைத்து பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள சவூதி அரேபியாவில் Mastercard, Visa மற்றும் American Express ஆகிய மூன்று வகையான கிரெடிட் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.