அபுதாபி சாலைகளின் வேகமான பாதைகளில் செல்ல டெலிவரி ரைடர்களுக்குத் தடை..!!

அபுதாபியில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய போக்குவரத்து விதிகளின் படி, உணவு டெலிவரி செய்யும் பைக் ரைடர்கள் சாலைகளில் வேகமான பாதைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மணிக்கு 100 கிமீ மற்றும் அதற்கு மேற்பட்ட வேக வரம்புகள் உள்ள சாலைகளில் அவர்களுக்கென நியமிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி எமிரேட்டின் சாலைகளில் ஏற்படும் வாகன விபத்துகளைக் குறைக்கவும், டெலிவரி ரைடர்களின் நலனுக்காகவும் உள்ளூர் அதிகாரிகள் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதன்படி, டெலிவரி ரைடர்கள் 3- மற்றும் 4-வழி சாலைகளில் மணிக்கு 100 கிமீ மற்றும் அதற்கு மேற்பட்ட வேக வரம்பு சாலைகளில் வலது பக்கத்திலிருந்து இரண்டு பாதைகளில் மட்டுமே செல்ல முடியும். மேலும் அவர்கள் 5 வழிச் சாலையில் வலது பக்கத்திலிருந்து மூன்று பாதைகளைப் பயன்படுத்தலாம்.

குறிப்பாக, டெலிவரி ரைடர்களின் ஆபத்தான டிரைவிங்கை (அதிவேகம், சாலை அறிவுறுத்தல்கள் மற்றும் சிக்னல்களைப் புறக்கணித்தல்) கட்டுப்படுத்துவதன் மூலம் சாலைகளில் போக்குவரத்து இயக்கத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அனைத்து சாலைப் பயனர்களின் பாதுகாப்பைப் பேணுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அபுதாபியின் போக்குவரத்து பாதுகாப்புக்கான கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்தத் திட்டம் டெலிவரி துறையில் பணிபுரியும் ரைடர்களுக்குத் தகுதி, கல்வி மற்றும் தொடர்ச்சியான பயிற்சி அளிப்பதன் மூலம் டெலிவரி துறையில் செயல்படும் நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்க முயற்சி செய்கிறது.

இந்நிலையில், டெலிவரி ரைடர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை ITC உருவாக்கியுள்ளது. அத்துடன் அபுதாபியில் செயல்படும் பல்வேறு டெலிவரி நிறுவனங்களின் சூப்பர்வைசர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தையும் ITC செயல்படுத்தியுள்ளது. கூடவே, சூப்பர்வைசர்களும் தங்கள் ஓட்டுநர்களுக்கு உள் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தொழில்முறை உரிமம் பெறுவதற்கு முன்நிபந்தனையாக ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டிய நன்னடத்தை சான்றிதழ்களை ஓட்டுநர்கள் பெற வேண்டும்.

பார்க்கிங் பகுதிகளும் ஓய்வு நிறுத்தங்களும்:

இதற்கிடையில், டெலிவரி ரைடர்கள் பார்க்கிங் செய்வதற்கு வசதியாக அபுதாபியில் 2,800க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்கள் மற்றும் அல் அய்னில் 200க்கும் மேற்பட்ட பார்க்கிங் பகுதிகளை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து ரைடர்களைப் பாதுகாக்க நிரந்தர ஓய்வு நிறுத்தங்களை வழங்கவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, அபுதாபி சிட்டி, கலீஃபா சிட்டி, முகமது பின் சயீத் சிட்டி, ஷக்பூத் சிட்டி மற்றும் ஷஹாமா பகுதியில் டெலிவரி ரைடர்களுக்கு தற்காலிக ஓய்வு நிறுத்தங்களாக நியமிக்கப்பட்ட ஆறு பேருந்துகளுக்கான பார்க்கிங் அனுமதியையும் ITC வழங்கியுள்ளது.

திட்டமிடுதல்:

இத்திட்டம், டெலிவரி துறையில் உள்ள ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்தே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது எமிரேட்டின் தொழில்முறை உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் ஓட்டுநர்களுக்கான தற்போதைய மதிப்பீடு மற்றும் பயிற்சி தரங்களின் மதிப்பாய்வுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times