ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 13 ஆண்டுகளாக சுமை தூக்கும் கூலியாளாக பணிபுரிந்து வரும் இந்தியரான வெங்கடா என்பவர், மஹ்சூஸ் டிராவில் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
அமீரகத்தில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக கடுமையாக உழைத்து வரும் வெங்கடாவின் வாழ்க்கையை மஹ்சூஸ் டிரா ஒரு நொடியில் புரட்டிப் போட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை, மஹ்சூஸ் டிராவில் இருந்து அவருக்கு வந்த அழைப்பு அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அனுபவம் குறித்து வெங்கடா பேசிய போது, “நிச்சயமாக நான் இதுவரை அனுபவிக்காத தருணம். நான் இவ்வளவு பெரிய ரொக்கத் தொகையை வெல்வது என் வாழ்க்கையில் இதுவே முதல் முறை” என்று மனம் திறந்துள்ளார்.
மேலும், மஹ்சூஸ் உடனான அவரது பயணம் குறித்து விவரிக்கையில், பத்து மாதங்களுக்கு முன்பு, முதன்முதலாக மஹ்சூஸில் பங்கேற்கத் தொடங்கியதாகவும், முதல் சில முயற்சிகளில் வெற்றி பெறாதபோதிலும் விட்டுக் கொடுக்காமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ரேஃபிள் பரிசு தவிர, 140வது டிராவின் போது ஐந்து எண்களில் மூன்றைப் பொருத்தியதன் மூலம் தான் 250 திர்ஹம்களையும் வென்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இப்போது, இந்த ரொக்கத் தொகையை வைத்து இந்தியாவில் தனது வீட்டுக் கடனை அடைக்கப் போவதாகவும், குடும்பத்தின் மீதான நிதிச் சுமைகளை குறைத்து விட்டு, தனது நெடுநாள் கனவான சொந்தத் தொழிலைத் தொடங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமார் 2,770 பங்கேற்பாளர்கள் அதே மஹ்சூஸ் டிராவில் 859,000 திர்ஹம்ஸ் பரிசுத் தொகையை இரண்டாவது மற்றும் மூன்றாம் பரிசுகளாக வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.