குவைத் நாட்டில் வீட்டு வாடகை பெரிதும் உயர்ந்துவிட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உள்ளூர் மக்களுக்கு சிக்கல் இல்லை. ஏனெனில் அந்நாட்டில் வசிப்பவர்கள் பொருளாதார ரீதியில் பலம் பெற்று தான் காணப்படுகின்றனர். வெளிநாட்டில் இருந்து வந்து வேலை செய்வோருக்கு தான் சிக்கலே.
வெளிநாட்டு மக்கள் அதிகம்
குவைத் நாட்டின் மக்கள்தொகை 4.6 மில்லியன் பேர். இதில் வெளிநாட்டில் இருந்து வந்து தங்கியிருப்போர் 3.2 மில்லியன். அதாவது உள்நாட்டு மக்களை விட வெளிநாட்டு மக்கள் தான் அதிகம். இவர்கள் வீடு வாடகைக்கு தேடினால் தாறுமாறாக விலை சொல்கிறார்களாம். தற்போதைய சூழலில் வெளிநாட்டவர்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதம் வீட்டு வாடகைக்கே சென்று விடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த மாத சம்பளம்
அந்த அளவிற்கு தான் சம்பளமும் வாங்குகின்றனர். குவைத்தில் தங்கி வேலை செய்து வரும் வெளிநாட்டவர்களில் 62 சதவீதம் பேர் 125 குவைத் தினார்களுக்கு குறைவான மாத சம்பளத்தை பெறுகின்றனர். 33 சதவீதம் பேர் 325 முதல் 400 தினார்கள் சம்பளம் வாங்குகின்றனர். ஒரு குவைத் தினார் என்றால் இந்திய மதிப்பில் 269 ரூபாய்க்கு சமம்.
வீட்டு வாடகை மிக அதிகம்
அப்படியெனில் குறைந்தபட்ச சம்பளம் என்பது சுமார் 30 ஆயிரம் என்ற அளவில் கிடைப்பதாக தெரிகிறது. இந்த அளவிற்கு சம்பளம் வாங்குகிறார்களே? அப்புறம் என்ன பிரச்சினை எனக் கேட்கலாம்? குவைத் நாட்டில் சாதாரண வீட்டு வாடகையே 30 ஆயிரம் ரூபாய் வந்துவிடும். கொஞ்சம் வசதியாக இருக்க வேண்டுமெனில் 50 ஆயிரம், 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
சிறிய இடத்தில் அதிகம் பேர்
எனவே குறைந்த சம்பளம் வாங்குவோர் அதற்கேற்ப வாடகைக்கு வீடு கிடைக்கும் இடத்தில் தான் வசிக்க முடியும். பலரும் போதிய வசதிகள் கூட இல்லாத இடத்தில் தான் தங்கி வருகின்றனர். சிறிய அறையில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சில இடங்களில் பெரிய ஹால்கள் இருக்கும். அதில் 50, 60 பேர் ஒன்றாக வசித்து வருவதாக கூறுகின்றனர்.
அபார்ட்மெண்ட்டில் நெருக்கடி
குடும்பமாக சென்று வசிக்க வேண்டுமெனில் குறைந்தது 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும் என்கின்றனர். குறிப்பாக ஆசியாவின் பல்வேறு நாடுகளில் இருந்து சென்று குவைத்தில் வசிப்போர், ஒரே அபார்ட்மெண்டில் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தி, ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களாக வசிக்கின்றனர். எனவே குவைத் நாட்டில் வீட்டு வாடகை என்பது பர்ஸை பதம் பார்க்கும் விஷயமாக தான் இருக்கிறது.