துபாயில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, சிகப்பு விளக்கை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது மற்றும் பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு கடுமையான அபராதங்களை விதிக்கும் விதமாக நடைமுறையில் உள்ள போக்குவரத்து சட்டத்தை திருத்தி புதிய அறிவிப்பை துபாய் அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த குற்றங்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவர்கள் ஈடுபட்ட குற்றத்திற்கு தகுந்தவாறு 10,000 திர்ஹம்ஸ் முதல் 100,000 திர்ஹம்ஸ் வரை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திருத்தப்பட்ட சட்டம் இன்று ஜூலை 6, வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாகவும், கடுமையான அபராதங்களை தவிர்க்க குடியிருப்பாளர்கள் கவனமுடன் வாகனம் ஓட்டுமாறும் துபாய் காவல்துறையும் எச்சரித்துள்ளது.
100,000 திர்ஹம்ஸ் அபராதம்:
காவல்துறையின் முன் அனுமதியின்றி சாலை பந்தயத்தில் பங்கேற்கும் குற்றத்தில் யாரேனும் ஈடுபட்டால், அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுவதோடு அந்த வாகனங்களை விடுவிக்க 100,000 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
50,000 திர்ஹம்ஸ் அபராதம்:
அதேபோன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமீறல்களின் கீழ் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை விடுவிக்க 50,000 திர்ஹம்ஸ் அபராதமாக செலுத்த வேண்டும். அவை,
- நடைபாதை சாலைகளில் மாற்றம் செய்த மோட்டார் சைக்கிள்களை ஓட்டுதல்.
- பொறுப்பற்ற முறையில் வாகனத்தை இயக்கி பிறரது உயிர்கள் அல்லது உடைமைகளுக்கு ஆபத்தை விளைவித்தல்.
- சிவப்பு விளக்குகளில் நிறுத்தாமல் ஓட்டுதல்.
- போலியான மற்றும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட நம்பர் பிளேட்டைக் கொண்டு வாகனத்தை ஓட்டுதல்.
- வேண்டுமென்றே, காவல்துறை வாகனத்துடன் மோதுதல் அல்லது வேண்டுமென்றே சேதப்படுத்துதல்.
- 18 வயதுக்குட்பட்ட நபர்கள் வாகனம் ஓட்டுதல்.
10,000 திர்ஹம்ஸ் அபராதம்:
இதற்கிடையில், பின்வரும் போக்குவரத்து விதிமீறல்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை 10,000 திர்ஹம் செலுத்திய பின்னரே மீட்டெடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது:
- வாகனத்தின் வேகம் மற்றும் சத்தத்தை அதிகரிக்க வாகனத்தில் கணிசமான மாற்றங்களைச் செய்தல்,
- காவல்துறையை தவிர்த்தல் மற்றும் லைசன்ஸ் ப்ளேட் இல்லாமல் வாகனங்களை ஓட்டுதல்.
- ஓட்டப் பந்தயங்களைப் பார்ப்பதற்காகவோ அல்லது சாலையில் வாகனங்களைக் காட்சிப்படுத்துவதற்காகவோ ஓட்டுநர்களை திரட்டுதல்.
- வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கான சதவீதத்தைத் தாண்டி ஜன்னல் அல்லது முன்பக்க கண்ணாடியை டின்ட் செய்தல்.
அதுமட்டுமின்றி, வாகன ஓட்டிகளின் மொத்த போக்குவரத்து அபராதம் 6,000 திர்ஹம்களுக்கு மேல் இருந்தால், துபாய் காவல்துறை உங்களின் வாகனத்தை பறிமுதல் செய்யலாம். பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் உரிமையாளர் விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதத்தை செலுத்திய பிறகே விடுவிக்கப்படும்.
அதேசமயம், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் மீட்டெடுக்கவில்லையெனில், வாகன உரிமையாளர் பறிமுதல் காலம் முடிந்த பிறகு ஒவ்வொரு நாளுக்கும் 50 திர்ஹம் வீதம் கூடுதல் அபராதமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனத்தை விடுவிப்பதற்கான நிபந்தனைகள்:
மாற்றியமைக்கப்பட்ட போக்குவரத்துச் சட்டத்தின் படி, பின்வரும் நிபந்தனைகளுக்குப் பிறகு வாகனங்கள் விடுவிக்கப்படலாம்:
- இதுவரை வாகனத்தின் மீது செலுத்த வேண்டிய அனைத்து அபராதங்களையும் செலுத்துதல்.
- விதிமீறலை அல்லது அதன் காரணங்களை நீக்குதல்.
- துபாய் காவல்துறையால் தீர்மானிக்கப்படும் வேறு எந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தல்.
நாடு கடத்தல் மற்றும் கூடுதல் நடவடிக்கைகள்:
துபாயில் அமலில் உள்ள சட்டத்தின்படி, அமீரகத்தை சாராத கனரக வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர் சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் ஓட்டினால் நிர்வாக ரீதியாக அமீரகத்தில் இருந்து நாடு கடத்தப்படுவார்.
அத்துடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட காலம் 90 நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், வாகனம் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட அதே விதிமீறல்களில் இருந்து ஒரு வருடத்திற்குள் மீண்டும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டால், வாகனத்தின் பறிமுதல் காலம் மற்றும் வாகனத்தை விடுவிப்பதற்காக செலுத்த வேண்டிய தொகை இரண்டும் இரட்டிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.