வெளிநாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாவாசிகளுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும் விதமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மையான விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் இடையே முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. வெளிநாட்டு பயணிகள் நாட்டைச் சுற்றிப்பார்க்க அதிக நேரத்தை வழங்கும் வகையில் போடப்பட்டுள்ள இந்த இன்டர்லைன் ஒப்பந்தத்தை இரு விமான நிறுவனங்களும் மேலும் விரிவுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் செய்தி ஊடகங்களிடம் பேசிய போது, ஒப்பந்தம் எப்போது நடைமுறைக்கு வரும் மற்றும் எப்படி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பது பற்றிய கூடுதல் விவரங்களை பகிர்ந்துள்ளார். பயணிகளுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கும் இந்த ஒப்பந்தம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
எமிரேட்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில், இந்த ஒப்பந்தம் அமீரகம் வரும் பார்வையாளர்களை ஒரே பயணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை அனுபவிக்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளது. அதுபோல, எதிஹாட் ஒரு ட்விட்டர் பதிவில் இந்த ஒப்பந்தத்தை “இரண்டு விமான நிறுவனங்கள், ஒரு டிக்கெட் மற்றும் முடிவில்லாத சாகசம்” என்று விவரித்துள்ளது. எனவே, பயணிகள் ஒரே டிக்கெட்டில் மற்ற விமான நிலையத்திலிருந்து தடையின்றி திரும்பலாம்.
அதாவது, பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த அதே விமான நிலையத்திலிருந்து திரும்பும் விமானத்தில் செல்லாமல், மற்றொன்றில் இருந்து வெளியேறலாம். இது அதே விமான நிலையத்திற்கு திரும்பிச் செல்லும் நேரத்தைச் சேமிக்க இது உதவுகிறது. மேலும், பயணிகளுக்கு அவர்களின் முழுப் பயணத்திற்கும், “வசதியான பேக்கேஜ் செக்-இன்” க்கும் நெகிழ்வுத்தன்மையை இது வழங்கும் என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?
எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் இதற்கு உதாரணமாகக் கூறியதன் அடிப்படையில்: “பயணிகள் கிழக்கு ஆசியாவில் இருந்து எதிஹாட்டில் அபுதாபிக்கு பறக்கும் பயணத் திட்டத்தை முன்பதிவு செய்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கள் நேரத்தை செலவிட்டு, பின்னர் ரிட்டர்ன் டிக்கெட்டில் அபுதாபியிலிருந்து எதிஹாட்டில் பயணிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமல், துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானத்தில் பறந்து சொந்த நாடு திரும்ப முடியும்.” என தெரிய வந்துள்ளது.
எப்போது நடைமுறைக்கு வரும்?
இந்த நடைமுறை பல நகரங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கு ஏற்புடையது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை, இருப்பினும் இந்த கோடையில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஏற்கனவே உள்ள முன்பதிவுகளுக்கு இது பொருந்தாது. ஒவ்வொரு விமான நிறுவனத்திலும் இருக்கும் முன்பதிவுகள் தற்போதைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடரும் என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
எல்லா இடங்களுக்கும் ஒப்பந்தம் கிடைக்குமா?
குறிப்பாக, இந்த இன்டர்லைனின் ஆரம்ப கட்டத்தில், ஒவ்வொரு கேரியரும் “ஐரோப்பா மற்றும் சீனாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில விமான நிலையங்களில் இருந்து உள்வரும் இன்டர்லைன் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் அமீரகத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தும்.
முன்பதிவு செய்வதற்கான வழிமுறை:
பயணிகள் தங்கள் பயணங்களை எமிரேட்ஸ் அல்லது எதிஹாட் இணையதளங்களிலும், ஆன்லைன் டிராவல் ஏஜென்ட் மற்றும் டூர் ஆபரேட்டர்கள் மூலமும் இதற்கு முன்பதிவு செய்யலாம்.