ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒவ்வொரு எமிரேட்டின் ஆட்சியாளர்களும் குறிப்பிடத்தக்க இஸ்லாமிய நிகழ்வுகளின் போது கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது பொதுவான நடைமுறையாகும். அதனடிப்படையில் தற்பொழுது ரமலான் மாதம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அவர்கள், சிறையில் இருந்து 1,025 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். மன்னிக்கப்பட்டுள்ள கைதிகள் பல்வேறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அமீரக ஜனாதிபதியின் இந்த மன்னிப்பு, விடுதலை செய்யப்பட்ட கைதிகளுக்கு அவர்களின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் சேவைக்கு சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கும், வெற்றிகரமான சமூக மற்றும் தொழில் வாழ்க்கையை நடத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது என கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று, (செவ்வாய்க்கிழமை, மார்ச் 21) ரமலான் பிறை தென்படுகிறதா என பார்க்கப்படும் என்று அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு ரமலான் மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிக்க, இன்று மக்ரிப் (சூரியன் மறைவு) தொழுகைக்குப் பிறகு, நாட்டின் பிறை பார்க்கும் குழு ஒன்று கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று பிறை காணப்பட்டால், ரமலான் மாதம் நாளை (மார்ச் 22 புதன்கிழமை) தொடங்கும். இல்லையென்றால், மார்ச் 23, வியாழன் அன்று ரமலான் மாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. வானியல் கணக்கீடுகளின் படி இந்த வருட ரமலான் மாதம் மார்ச் 23 வியாழக்கிழமை தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.