பொதுவாக ரமலான் மாத காலத்தின் போது அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்படுவது பல ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் நடைமுறையாகும். அதன் தொடர்ச்சியாக இந்த வருட ரமலான் மாதம் துவங்க இன்னும் ஏறக்குறைய ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்த ரமலான் மாதத்திற்கான ஊழியர்களின் குறைக்கப்பட்ட வேலை நேரத்தினை தற்பொழுது அமீரக அரசு அறிவித்துள்ளது.
அதாவது தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரம் ரமலான் மாதத்தின் போது தினசரி இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என்று அமீரகத்தின் மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) தெரிவித்துள்ளது. இந்த குறிப்பிடப்பட்ட தினசரி வேலை நேரங்களின் வரம்புகளுக்குள் மற்றும் அவர்களின் பணியின் தன்மைக்கு ஏற்ப நெகிழ்வான அல்லது தொலைதூர பணி முறைகளை )remote work)செயல்படுத்தலாம் எனவும் நிறுவனங்களுக்கு விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமீரகத்தில் உள்ள தனியார் துறை ஊழியர்கள் பொதுவாக ஒரு நாளைக்கு எட்டு முதல் ஒன்பது மணிநேரம் வேலை செய்கிறார்கள், மேலும் ரமலானின் போது இது தினமும் இரண்டு மணிநேரம் குறைக்கப்படும். இந்த நேரத்தை விட ஊழியர்கள் அதிக நேரத்திற்கு பணிபுரிந்தால் அது கூடுதல் நேரமாகக் (overtime) கருதப்படலாம், அதற்காக தொழிலாளர்கள் கூடுதல் இழப்பீடு (compensation)பெற உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் துறை போன்றே அமீரக அரசானது அரசு ஊழியர்களுக்கும் புனித ரமலான் மாதத்தில் அதிகாரப்பூர்வ வேலை நேரத்தை மாற்றியமைத்து சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி ரமலான் மாதம் முழுவதும் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மதியம் 2:30 மணி வரை அனைத்து அமைச்சகங்களும் கூட்டாட்சி நிறுவனங்களும் செயல்படும் என்றும் வெள்ளிக்கிழமைகளில், வேலை நேரம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
துபாய் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறப்பணிகள் துறை (IACD) வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் வரும் மார்ச் 12, 2024 செவ்வாய்க்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது பிறை பார்ப்பதன் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.