11.9 C
Munich
Friday, October 18, 2024

ஐரோப்பிய நாடுகளை திடீரென சூழும் “புகை” மண்டலம்.. இப்போது நார்வே.. ஆனா அதோடு நிற்காதாம்..

ஐரோப்பிய நாடுகளை திடீரென சூழும் “புகை” மண்டலம்.. இப்போது நார்வே.. ஆனா அதோடு நிற்காதாம்..

Last Updated on: 11th June 2023, 11:28 am

ஓட்டாவா: கனடா நாட்டில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ இப்போது உலகிற்கே மிகப் பெரிய ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. ஏனென்றால் கனடா காட்டுத் தீயில் இருந்து கிளம்பிய புகை இப்போது ஐரோப்பாவை அடைந்துள்ளது.

கனடா நாட்டில் இப்போது மிக மோசமான காட்டு தீ ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அங்குக் காட்டுத் தீ பற்றி எரியும் நிலையில், பல லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட காடுகள் இந்த தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

கடந்த 10, 15 ஆண்டுகளில் காட்டுத் தீயால் இந்தளவுக்கு மோசமான ஒரு பாதிப்பு ஏற்பட்டதே இல்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த பல ஆயிரம் மக்கள் ஏற்கனவே அங்கிருந்து பத்திரமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீ: கனடா காட்டுத்தீயால் அங்கே மிகக் கடுமையான புகை கிளம்பியுள்ளது. இந்த புகையால் பல இடங்களில் புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது. இந்த புகை கனடா மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் பரவியது. இதனால் தலைநகர் வாஷிங்டன், நியூயார்க் எனப் பல முக்கிய நகரங்களில் புகை சூழ்ந்துள்ளது..

இதனால் பல ஆயிரம் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், காற்றின் தரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே கனடாவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயின் புகை, பல ஆயிரம் கிமீ பயணித்து இப்போது ஐரோப்பாவை எட்டியுள்ளது. இது காட்டுத் தீ எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகள்: இந்த காட்டுத்தீயின் புகை ஏற்கனவே அமெரிக்காவின் சில பகுதிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் 7.5 கோடி மக்கள் இப்போது ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயின் புகை ஆர்டிக் கடலை கடந்து இப்போது நார்வே நாட்டை எட்டியுள்ளது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளிலும் புகையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நார்வே நாட்டில் புகை அதிகரித்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறத்து அந்நாட்டின் ஆய்வாளர் நிகோலாஸ் எவாஞ்சலியோ கூறுகையில், “நார்வேயில் உள்ள மக்கள் இந்த புகையை லேசான மூடுபனியாக உணரலாம். இருப்பினும், அமெரிக்காவைப் போல அதீத புகை இங்கே இல்லை. இதனால் உடல்நிலை பாதிப்பு பெரிதாக ஏற்படாது. நீண்ட தூரம் பயணித்து வருவதால் இந்த புகை நீர்த்துப் போய் இருக்கும்.

ஆபத்து: வரும் நாட்களில் இந்த புகை ஐரோப்பாவில் மேலும் பல நாடுகளுக்குப் பரவும். குறிப்பாக தெற்கு ஐரோப்பா நோக்கிப் பரவுமாம். அவ்வளவு ஏன் ஆசிய நாடுகளுக்கு நுழையும் வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். காட்டுத்தீ புகை நீண்ட தூரம் பயணிப்பது அசாதாரணமானது அல்ல. காட்டுத்தீயில் இருந்து வரும் புகை அதிக உயரத்தில் செல்லும். இது வளிமண்டலத்தில் நீண்ட காலம் தங்கி, நீண்ட தூரம் பயணிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

அதேநேரம் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஏற்பட்ட காட்டுத் தீ நார்வே நாடு வரை பரவியது குறிப்பிடத்தக்கது. கனடா காட்டுத்தீயால் பாதிப்பால் அமெரிக்காவில் பல நகரங்களில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. இதனால் நியூயார்க் நகரின் காற்று மாசு சில மணி நேரத்தில் டெல்லியை ஓவர்டேக் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version