ஆபரேஷன் மில்லே என்ற பெயரில் பிரித்தானியா முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் £130 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள கஞ்சா பொருட்கள், £636,000 பவுண்ட் பண நோட்டுகள் மற்றும் 20 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனை
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதிலும் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழுக்களை கண்டறிந்து அவற்றை சீர்குலைக்கும் வகையில் ஒரு மாத காலம் நடைபெற்ற சோதனையில் £130 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள கஞ்சா பொருட்கள், 20 துப்பாக்கிகள், £1m மதிப்பிலான கோகோயின் மற்றும் £636,000 பவுண்ட் பண நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழுக்களை சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட தொடர் ஒருங்கிணைந்த சோதனையில் அதிகாரிகள் 180,000 கஞ்சா செடிகளை கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர்.ஆபரேஷன் மில்லே என பெயரிடப்பட்ட இந்த சோதனையில் இறங்கிய அதிகாரிகள் கடந்த மாதம் முழுவதும் ஆயிரம் தேடுதல் வாரண்டுகளை ஒருங்கமைத்துள்ளனர்.
இது தொடர்பாக தேசிய காவல்துறை கவுன்சில் தலைவர் ஸ்டீவ் ஜப் வழங்கிய தகவலில், தற்போதைய நடவடிக்கை கணிசமான அளவிற்கு குற்றச் செயல்களை நாட்டில் இருந்து வெற்றிகரமாக அப்புறப்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளது.
967 பேர் கைது
ஆபரேஷன் மில்லே-வின் கீழ் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள அனைத்து கவுண்டிகளிலும் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கஞ்சா பயிர்களை சாகுபடி செய்தது, பண மோசடி, மற்றும் ஆயுத குற்றங்களுக்காக மொத்தமாக இதுவரை 967 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 450க்கும் மேற்பட்டோர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.