பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில்கள் மோதல்- 515 பேர் காயம்..!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 515 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதில், 102 நபர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழப்புகள் இல்லை.சாங்பிங் சுரங்கப்பாதையில் ரயில்கள் கீழ்நோக்கி செல்லும் போது, கடும் பனிப்பொழிவின் காரணமாக தண்டவாளங்கள் வலுவலுப்பானதால், நேற்று மாலை ரயில் விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.இன்று காலையில் மருத்துவமனையில் இருந்து, 423 நபர்கள் வீடு திரும்பியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ரயில் விபத்தால் ஒரு ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் துண்டிக்கப்பட்டது. எந்த ரயிலில் துண்டிக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ரயில் விபத்து எவ்வாறு நேர்ந்தது?

வழுக்கும் தடங்கள் முன்னாள் சென்ற ரயிலில் தானியங்கி பிரேக்கிங்கைத் தூண்டியது.அதே தண்டவாளத்தில், பின்னால் வந்த ரயில், ஒரு இறக்கமான பாதையில் சென்று கொண்டிருந்ததால் சரியான நேரத்தில் பிரேக் பிடிக்க முடியாததால் விபத்து ஏற்பட்டதாக, நகர போக்குவரத்து ஆணையம் தனது சமூக ஊடக கணக்கில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.அவசர மருத்துவ பணியாளர்கள், போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உதவியுடன், இரவு 11 மணிக்குள் விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து அனைவரும் மீட்கப்பட்டனர்.தற்போது, 25 நபர்கள் கண்காணிப்பில் உள்ள நிலையில், 67 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடுமையான பனிப்பொழிவால் புதன் அன்று பள்ளிக்கூடங்கள் மற்றும் சில ரயில்களின் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.பெய்ஜிங்கில் குளிர்காலம் கடுமையானதாக இருக்கும் என்றாலும், பனிப்பொழிவு அரிதானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times