சவுதி அரேபியாவி்ல் வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள விசா ஸ்டிக்கரை அகற்றி, அதற்கு பதிலாக எலக்ட்ரானிக் விசாவை மாற்றும் ஒரு புதிய திட்டத்தை சவூதியின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த எலக்ட்ரானிக் விசாவில் பயனாளிகளின் தரவுகளை QR குறியீடு மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய முயற்சியின் முதல் கட்டத்தில் ஏழு நாடுகளில் இந்த புதிய விசா நடைமுறை செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அதில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஜோர்டான், எகிப்து, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தியில் வேலை, குடியிருப்பு, மற்றும் விசிட் விசாக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விசாக்களை வழங்குவதற்கான ஒரு புதிய செயல்முறையை உருவாக்குவதன் மூலம், அமைச்சகத்தால் வழங்கப்படும் தூதரக சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்கான நடைமுறைகளை நிறைவு செய்யும் கட்டமைப்பிற்குள் இந்த முயற்சி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.