ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) தனியார் துறைக்கான அதிகாரப்பூர்வ ஈத் அல் அதா விடுமுறைகளை அறிவித்துள்ளது. ஏற்கெனவே அமீரகத்தில் பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தற்பொழுது வெளியான அறிவிப்பின்படி அரஃபா தினம் மற்றும் தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஈத் அல் அதாவை முன்னிட்டு ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வரும்ஜ ஜூன் 27 செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் 30 வெள்ளி வரை (இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின்படி துல் ஹஜ் 9 முதல் 12 வரை) விடுமுறை இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு வருவதால் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ளவர்களுக்கு ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் ஜூலை 3, திங்கட்கிழமை பணிக்குத் திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மிக நீண்ட ஊதியத்துடன் கூடிய விடுமுறை இதுவாகும். மேலும் இந்த வார ஞாயிறு விடுமுறை முடிந்த பிறகு ஜூன் 26 திங்கள் அன்று மட்டும் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும். அதிலும் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை கொண்டவர்கள் அடுத்த வார திங்கட்கிழமை விடுமுறை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.